சப்த கன்னியர் வழிபட்ட சப்த மங்கை தலங்கள்

பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, சப்த மங்கை தலங்கள் அமைந்திருக்கின்றன.

Update: 2024-10-27 11:41 GMT

பெண் தெய்வ வழிபாட்டிலும், சக்தி வழிபாட்டிலும், கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கிய இடம் உண்டு. பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய 7 பேரும், 'சப்த கன்னிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்த சப்த கன்னிகள் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 கோவில்கள் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சுற்றி அமைந்துள்ளன. இந்த 7 கோவில்களும், 'சப்த மங்கை தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரையில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய 7 பருவங்களை கடந்து வருகிறாள். இந்த பருவங்களுக்கு இடையில் பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்கும் தலங்களாக, தலங்களாக, இந்த 'சப்த மங்கை தலங்கள்' அமைந்திருக்கின்றன. அந்த கோவில்கள் குறித்த விபரங்கள் வருமாறு:

சக்கரமங்கை

சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது சக்கரமங்கை. இதனை 'சக்கராப்பள்ளி' என்றும் அழைப்பர். இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'பிராம்ஹி' வழிபட்ட தலமாகும். இங்கு மூலவராக சக்கரவாகேஸ்வரரும், அம்பாள் தேவநாயகியும் அருள்பாலிக்கின்றனர். பார்வதி தேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இதுவாகும். கோவிலின் தல விருட்சம் வில்வ மரம். இக்கோவிலானது தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டைக்கு அருகில் சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது.

அரியமங்கை

சப்த மங்கை தலங்களில் 2-வது தலமாக இருப்பது 'அரியமங்கை'. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் மகேஸ்வரி வழிபட்ட தலமாகும். இங்குள்ள இறைவன் அரிமுக்தீஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவிக்கு, தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சிவபெருமான் காட்டி அருளிய தலம் இது. கோவிலின் தலவிருட்சம் நெல்லி மரம். தஞ்சாவூர் -கும்பகோணம் சாலையில் சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

சூலமங்கை

சப்த மங்கை தலங்களில் 3-வது தலமாக இருப்பது 'சூலமங்கை'. தற்போது இவ்வூர் 'சூலமங்கலம்' என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்தமாதர்களில் 'கவுமாரி' வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் கிருத்திவாகேஸ்வரர் என்றும், அம்பாள் அலங்காரவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவிக்கு, சிவபெருமானின் சூல தரிசனம் கிடைத்த தலம் இதுவாகும். அம்பாள் இங்கு, மங்கை வடிவில் காட்சி அளிக்கிறாள். கோவிலின் தலவிருட்சம் வில்வ மரம். இக்கோவிலானது தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள அய்யம்பேட்டைக்கு அருகில் சூலமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது.

நந்திமங்கை

சப்த மங்கை தலங்களில் 4-வது தலமாக இருப்பது 'நந்திமங்கை'. இவ்வூர் நல்லிச்சேரி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'வைஷ்ணவி' வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் ஜம்புநாதசுவாமி என்றும், அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவி, இங்கு சிவபெருமானின் திருக்கழல் தரிசனத்தை பெற்றாள். கோவிலின் தல விருட்சம் நாவல் மரம். கோவிலானது தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் நல்லிச்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

பசுமங்கை

சப்த மங்கை தலங்களில் 5-வது தலமாக இருப்பது 'பசுமங்கை'. இவ்வூர் பசுபதிகோவில் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'வராகி' வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்றும், அம்பாள் பால்வள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் மாடக்கோவில் அமைப்பை கொண்டதாகும். பார்வதி தேவிக்கு, தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இதுவாகும். கோவிலின் தல விருட்சம் வில்வ மரம். கோவிலானது தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 16 கி.மீ. தொலைவில் பசுபதிகோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.

தாழமங்கை

சப்த மங்கை தலங்களில் 6-வது தலமாக இருப்பது 'தாழமங்கை'. இவ்வூர் தாழமங்கை, தாயமங்கலம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'இந்திராணி' வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்றும், அம்பாள் ராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவிக்கு, பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இதுவாகும். கோவிலின் தல விருட்சம் தாழை மரம். கோவிலானது தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தாழமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது.

திருப்புள்ளமங்கை

சப்த மங்கை தலங்களில் 7-வது தலமாக இருப்பது திருப்புள்ளமங்கை. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் ஆலந்துறைநாதர் என்றும், அம்பாள் அல்லியங்கோதை என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவி, சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இதுவாகும். கோவிலின் தல விருட்சம் ஆலமரம். தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் பசுபதிகோவில் எனும் ஊரில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்