திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 10-ந்தேதி 'பாலாலயம்'

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் தொடங்க வருகின்ற 10-ந்தேதி பாலாலயம் நடக்கிறது.;

Update:2025-02-06 16:55 IST

திருப்பரங்குன்றம்,

அறுபடை வீடுகளில் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம் நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆகவே 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆகம விதிக்கு உட்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலின் ராஜகோபுரம் மற்றும் கோவிலுக்குள் உள்ள பல்வேறு சன்னதிகளின் விமானங்கள் மற்றும் இந்த கோவிலின் துணை கோவில்களாக மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் உள்ளிட்ட 6 கோவில்களுக்கும் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்ய அறங்காவலர் குழுவினர் திட்டமிட்டனர்.

இதனையடுத்து பொறியாளர் பிரிவு மூலமாக கோவில்களில் தூண்கள், சிற்பங்கள், சாலகரங்களில் நீளம், அகலம் குறித்து அளவீடு செய்யும் பணியும், அதற்கான மதிப்பீடும் தயார் செய்தனர். இதற்கிடையில் வருகின்ற 10-ந்தேதி சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம் நாளில் பாலாலயம் செய்ய உகந்த தேதி என்று தீர்மானித்தனர்.இந்த நிலையில் திருப்பணிகள் தொடங்கும் முகமாக பாலாலயம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார்.

அமைச்சர் மற்றும் கமிஷனர் அனுமதி வழங்கியதையொட்டி வருகின்ற 10-ந்தேதி பகல் 12 மணி முதல் 12.15 மணிக்கு பாலாலயம் நடக்கிறது. இதில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 7 நிலை கொண்ட ராஜகோபுரம் கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், வல்லப கணபதி விமானம், பசுபதி ஈஸ்வரர் விமானத்திற்கு பாலாலயம் செய்யப்படுகிறது.

இதே போல மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், கீழத்தெருவில் உள்ள குருநாதன் கோவில், மேல ரத வீதியில் உள்ள பாம்பலம்மன் கோவில் ஆகிய உபகோவில்களுக்கும் திருப்பணிகள் செய்வதற்கு பாலாலயம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்திய பிரியா, கோவில் துணை கமிஷனர் எம்.சூரிய நாராயணன், அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், நா.மணிச்செல்வம், தி.மு.பொம்மதேவன், தி.ராமையா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்