திருமலையில் குமாரதாரா தீர்த்த முக்கொடி விழா.. ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
குமாரதாரா தீர்த்த முக்கொடியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.;
திருமலை:
சேஷாசல மலைத்தொடரில் இருக்கும் முக்கிய தீர்த்தங்களில் குறிப்பிட்ட தினங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெறும். பக்தர்கள் கரடுமுரடான மலைப்பாதையில் பயணித்து இந்த தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி, சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபடுவது வழக்கம். அவ்வகையில் குமாரதாரா தீர்த்த முக்கொடி விழா இன்று (14.3.2025) நடைபெற்றது.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று குமாரதாரா தீர்த்தத்தில் புனித நீராடினர். அங்குள்ள குமார தர சுப்பிரமணியரை வழிபட்டனர். கரடுமுரடான மலைப்பகுதி என்பதால், பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறிச் சென்று தீர்த்தத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குமாரதாரா தீர்த்த முக்கொடியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அன்னபிரசாதம், மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டன.
வராஹர் மற்றும் மார்க்கண்டேய புராணங்களின்படி, ஒரு வயதான முனிவர் இங்கு தவம் செய்து, சுவாமியின் அருளால் இளைஞனாக மாறியதால் இந்த தீர்த்தம் குமாரதாரா தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. அந்த இடம் குமாரதாரா என்று அழைக்கப்படுகிறது. இதேபோல் தேவர்களின் தளபதியான ஸ்ரீ குமார சுவாமி (முருகப்பெருமான்) அசுரனான தாரகாசுரனை வதம் செய்ததிலிருந்து, இந்த இடம் குமாரதாரா என்று பிரபலமடைந்ததாக பத்ம புராணம் மற்றும் வாமன புராணம் கூறுகிறது.