திருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

Update: 2024-10-12 23:13 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதன்பிறகு கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் கோவிலுக்கு அருகில் உள்ள பூவராகசாமி கோவில் முக மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களுக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹவச்சனம், முக சுத்தம், தூப பிரசாதம் வழங்குதல், சத்ர சாமர வியாஜன தர்பணாதி பிரசாதம், ராஜோபச்சாரம் ஆகியவை நடந்தன. அர்க்யபாத நிவாந்தத்தின் ஒரு பகுதியாக பால், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இவை சங்கநிதி, பத்மநிதி, சஹஸ்ரதாரா மற்றும் கும்பதாரணத்துடன் வைகானச ஆகம யுக்தாவாக நடந்தது.

இதையடுத்து அர்ச்சகர்கள், உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு எடுத்துச் சென்று 3 முறை நீரில் மூழ்கி எடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி எனப்படும் ஸ்நானம் செய்வித்தனர். அப்போது ஸ்ரீவாரி புஷ்கரணியில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் 3 முறை மூழ்கி புனிதநீராடினர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்ததும் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர். அதன்பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீவாரி புஷ்கரணியில் இருந்து உற்சவர்களை கோவிலுக்குள் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கோவிலில் கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்