விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி அதிகாலை முதல் 16-ந்தேதி (நேற்று முன்தினம்) அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் 15-ந்தேதியும், நேற்று முன்தினமும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வழக்கமாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இக்கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், பவுர்ணமியின் போது கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் வருகை தந்ததாலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று தனித்தனியாக பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றதை காண முடிந்தது.