சபரிமலையில் குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள்.

Update: 2024-11-18 00:42 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.

சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்