கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2023-24-ம் கல்வி ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
2023-2024-ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் என்கிற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 15-ந் தேதிக்கு உள்ளும், புதிய விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதிக்கு உள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.