அல்லு அர்ஜுன் கைது; தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை- தமிழிசை சவுந்தரராஜன்
அசம்பாவிதம் நடந்த பின்பு அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன் உதாரணம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.
பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நேற்றிரவே ஐதராபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, இன்று காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை... இதுதான் தெலுங்கானாவில் அல்லு அர்ஜுனின் கைதில் நடந்திருப்பது... சத்யா தியேட்டரில் புஷ்பா 2 கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கக் கூடியது அதே நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை.. ஓரிடத்தில் தேவைக்கு அதிகமான கூட்டம் சேர ஆரம்பித்த உடனேயே காவல்துறை கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் உடனே துரித படுத்த வேண்டும் அசம்பாவிதம் நடக்கும் வரை பார்த்துவிட்டு பின்பு கூட்டம் கூடியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது.
கைது செய்தது தவறான முன்னுதாரணம்.. சென்னையிலும் வானூர்தி சாகசத்தின் போதும் கூட்டம் கூட ஆரம்பித்த உடனேயே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும் காவல்துறையின் பாதுகாப்பு தோல்வியினால் மனதிற்கு வேதனையாக ஐந்து உயிர்கள் பறிபோயின தெலுங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும்? தமிழக ஆட்சியாளர்களை? தெலுங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பைத் தான் அளிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது