30 செல்போன்கள், ரூ.2½ லட்சம் திருட்டு
மதுரை மீனாட்சி பஜாரில் கடைகளை உடைத்து 30 செல்போன்கள், ரூ.2½ லட்சம் திருட்டு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலையில் கடையை திறக்க வியாபாரிகள் வந்துள்ளனர். அப்போது அங்குள்ள கடைகளில் 3 கடைகளின் பூட்டுகள் மற்றும் மேற்கூரைகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
உடனே கடைக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கடையின் உள்ளே சென்று பார்த்தனர். அதில் அந்த 3 கடையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் 2½ லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.