'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய 'லப்பர் பந்து' படம் வருகிற 18-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.;
சென்னை,
கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளதை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 18-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் இது இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் மட்டுமே ஓ.டி.டியில் வெளியாகவுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எப்பொழுது ஓடிடியில் வரும் என தகவல் வெளியாகவில்லை