சினிமாவில் ஹீரோவாக 32 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்

நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Update: 2024-12-04 03:34 GMT

சென்னை,

விஜய்யின் தொடக்கமும் வளர்ச்சியும்

நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பெரும்பாலான படங்களில் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்தார். பின்னர் கடந்த 1992-ல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இப்படத்தில் இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன. ஆனாலும், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை விஜய்யை வைத்து இயக்கினார்.

ஆனாலும், விஜய் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த 'பூவே உனக்காக' படம்தான் விஜய்யைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக விஜய் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.

பின்னர் 'திருமலை' படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாகவும் விஜய் உருவெடுத்தார். திருமலை தொடங்கி வைத்த ஆட்டம், கில்லி, திருப்பாச்சி, சிவகாசி என தொடர்ந்தது . பிறகு நண்பன், துப்பாக்கி என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளைக் கொடுத்தார் விஜய். கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி வெளியான 'லியோ' திரைப்படம் விஜய்யின் 67-வது படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. அதனைத்தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் விஜய் நடித்திருந்தார். இப்படம் ரூ. 455 கோடிக்கு மேல் வசூலித்தது.

கட்சி பெயர், கொடி, பாடல் அறிமுகம்

இவ்வாறு தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இன்னும் 1 படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார். இது தமிழ் சினிமா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் நமது இலக்கு என்று தெரிவித்த விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து கட்சி கொடிக்கான விளக்கம், கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து சமீபத்தில் நடந்து முடிந்த முதல் மாநாட்டில் தெரிவித்தார்.

சினிமாவில் ஹீரோவாக 32 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்

இந்நிலையில், நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆயிரம் கோடி சாதனை படைக்குமா?

இந்த 32 ஆண்டுகளில் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 69வது படமான 'தளபதி 69' அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான எந்த திரைப்படமும் ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்ததில்லை.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் அந்த சாதனையை படைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி திரைப்படம்

நடிகர் விஜய் 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால் இதன்மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பாபி தியோல், மமிதா பைஜு, பிரியா மணி, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்