நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஒரே நாளில் இரண்டு முறை கல்யாணம்

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகிற 12-ந் தேதியில் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.

Update: 2024-12-04 11:19 GMT

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைதொடர்ந்து "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" போன்ற படங்களில் நடித்து உள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவான பேபிஜான் என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அந்த காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். இவர்களின் காதலுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இல்லை. இதையடுத்து வருகிற 12-ம் தேதி கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.

அதாவது, 12ம் தேதி காலை இந்து முறைப்படி திருமணம் நடக்கிறது. அன்று மாலையே தேவாலயத்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவிருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முறை திருமணம் நடக்கிறது. கீர்த்தியும், ஆண்டனியும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு மதப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்