டோவினோ தாமஸ், திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படத்தின் டீசர் வெளியீடு
திரிஷா நடித்துள்ள 'ஐடென்டிட்டி' படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
சென்னை,
டோவினோ தாமஸ் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் டோவினோ தாமஸ் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து 'ஐடென்டிட்டி' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். அதாவது கடந்த 2020 ம் ஆண்டு டோவினோ தாமஸ், அகில் பால் மற்றும் அனஸ்கான் இயக்கத்தில் 'பாரின்ஸிக்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி 'ஐடென்டிட்டி' திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது.
அதன்படி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் டோவினோ தாமஸ் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.