'லவ் டுடே' படத்தின் இந்தி ரீமேக் - டிரைலர் வெளியீடு
‘லவ் டுடே’ திரைப்படம் இந்தியில் ‘லவ்யப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.;
மும்பை,
கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'லவ்யப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 7-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.