திருமணமான ஆண்கள் அனைவரும் மனைவி பேச்சை கேட்க வேண்டும் - அபிஷேக் பச்சன் அட்வைஸ்
நான் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டேன் என்று அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
மும்பை,
இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோரான நிலையில் சமீப காலமாக இருவரும் விவாகரத்து செய்து பிரியப் போவதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஐஸ்வர்யா ராய் விழாக்களுக்கு குழந்தையுடன் தனியாக சென்று கலந்து கொள்வது இதனை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அபிஷேக் பச்சன் பேசும்போது, "திருமணமான ஆண்கள் அனைவரும் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும்" என்றார். இதன்மூலம் விவாகரத்து உண்மை இல்லை என்று மறைமுகமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் பேசும்போது. "விமர்சனங்கள் என்பது சாதாரண விஷயம். நான் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டேன். படங்களில் இயக்குனர்கள் சொன்ன மாதிரி நடித்து விட்டு போகிறேன்" என்றார்.