பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதன்று... பச்சைத் தமிழ் விழா - வைரமுத்து வாழ்த்து
தமிழன் என்ற இனத்திற்கு உரித்தான விழா பொங்கல் திருவிழா என்று வைரமுத்து கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு தை மகளை தமிழர்கள் வரவேற்று வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழன் என்ற இனத்திற்கு உரித்தான விழா பொங்கல் திருவிழா. இந்த மண்ணில் விளைந்த கரும்பு, மஞ்சள், இஞ்சி, தமிழ் நிலத்தில் உழுது விளைவித்த நெல், வீட்டுச் சர்க்கரையாகிய நாட்டுச் சர்க்கரை இவையாவும் பொங்கலின் கச்சாப் பொருள்கள். பொங்கலின் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டவையல்ல; பொங்கல் என்ற திருவிழாவும் இறக்குமதி செய்யப்பட்டதன்று.
எனவே பச்சைத் தமிழ் நாட்டின், பச்சைத் தமிழ் விழா பொங்கல்தான். மண், உணவு, மனிதன், மாடு என்ற நான்கு தத்துவங்களுக்கான கூட்டுறவின் குறியீடுதான் பொங்கல். கூடிக் கொண்டாடுங்கள்; வாழுங்கள்; வாழ்த்துங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.