மிரட்டிய விஜய் - 'தி கோட்' படம் எப்படி இருக்கு?

அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் மிரட்டி இருக்கிறார் விஜய்.

Update: 2024-09-06 02:18 GMT

சென்னை,

பயங்கரவாத தடுப்பு உளவுத்துறை அதிகாரியான விஜய், தன் குழுவினருடன் வெளிநாடு சென்று அங்கு யுரேனியத்தை கடத்தும் பயங்கரவாத குழுவின் தலைவனான மோகன் மற்றும் கூட்டத்தை அழிக்கிறார்.பின்னர் மற்றொரு வேலை காரணமாக தன் கர்ப்பிணி மனைவி சினேகா மற்றும் சிறுவயது மகனோடு தாய்லாந்து செல்லும் விஜய் அங்கு மகனை இழக்க, வேலையில் இருந்து நின்று விமான நிலையத்தில் பணியாற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் ரஷ்யா செல்லும் விஜய் அங்கு இறந்துபோனதாக நினைத்த தனது மகனை காண்கிறார். பின்னர் மகனுடன் நாடு திரும்புகிறார் விஜய். அதற்கு பின் விஜய் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் இருப்பது யார்? பயங்கரவாத சதித்திட்டத்தை விஜய்யால் முறியடிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.

அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் மிரட்டி இருகிறார் விஜய். செண்டிமெண்ட், காதல், நடனம் என அனைத்திலும் நடிப்பை கொட்டி தெறிக்க விட்டிருக்கிறார். மோகன் வித்தியாசமான வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். மேலும், விஜய்யுடன் உளவுத்துறை அதிகாரிகளாக வந்த பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் ஆகியோர் தங்களது அனுபவத்தால் படத்திற்கு பலம் சேர்கின்றனர்.

வழக்கமான கதாநாயகியாக வந்து செல்கிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி. மெயின் கதாநாயகியாக வரும் சினேகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். பிரேம்ஜி, யோகி பாபு ஆகியோர் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகின்றனர். லைலா, வி.டி.வி.கணேஷ், வைபவ், ஆகாஷ் அரவிந்த், அஜய், பார்வதி நாயர், யுகேந்திரன், டி.சிவா, சுப்பு பஞ்சு, அஜய்ராஜ், அபியுக்தா ஆகியோர் கொஞ்சம் நேரம் திரையில் வந்திருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.

திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் திடீர் வருகை ரசிகர்களை மகிழ்விக்கிறது. ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் வரும் விஜயகாந்த் இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாமே என ஏக்கம் கொள்ள வைக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்து இப்படத்தை பெரும் வெற்றி படமாக மாற்ற பெரும் பங்கு வகித்திருக்கிறது. இளையராஜாவின் பழையப் பாடல்களை அங்கங்கே ஒலிக்கச் செய்து இருப்பது ரசிக்க வைக்கிறது.

யூகிக்கும்படியான காட்சிகள், லாஜிக் மீறல்கள் படத்தின் பலகீனம். நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் ஹீரோயிசம், சென்டிமென்ட், நட்பு, ஆக்சன், அடிக்கடி கொஞ்சம் டுவிஸ்ட், கொஞ்சம் காதல், கொஞ்சம் நகைச்சுவை என அனைத்தையும் சேர்த்து மூன்று மணி நேரமும் நம்மை ரசிக்க வைக்கும் விதத்தில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Tags:    

மேலும் செய்திகள்