அந்தரங்க காட்சியில் நடித்தபோது கூச்சம் - அஞ்சலி
நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அஞ்சலி சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், 'சினிமாவில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். சில படங்களுக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டேன். சண்டை காட்சிகளில் கூட டூப் இல்லாமலேயே நடித்தேன். பகிஷ்கரனா வெப் தொடரில் மிகவும் அந்தரங்கமான காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த காட்சியை படமாக்கினார்கள். ஆனாலும் அதில் நடித்தபோது கூச்சமாகவும், டென்ஷனாகவும் இருந்தது.
எத்தனையோ நல்ல படங்களில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்துக்கு முடிந்த அளவு நியாயம் செய்து இருக்கிறேன். நான் நடித்த எல்லா கதாபாத்திரத்துக்கும் நான் எதிர்பார்த்ததைவிட நல்ல பெயர் கிடைத்தது.சமூக வலைத்தளத்தில் எனக்கு எதிராக எதிர்மறை அவதூறு விமர்சனங்கள் வரும்போது கொஞ்சம் வேதனைப்படுவேன். ஆனால் உடனே மறந்துவிடுவேன். என் திருமணத்தை பற்றிக்கூட நிறைய வதந்திகள் வந்துள்ளன. நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன்' என்றார்.