வயநாடு நிலச்சரிவு: நிவாரண பணியில் நடிகை நிகிலா - வீடியோ

மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகை நிகிலா விமலாவை சமூகதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

Update: 2024-07-31 14:27 GMT

சென்னை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு. மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 251- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 250 கிலோ உணவு பொருட்கள் மற்றும் 100 குடிநீர் பாக்கெட்டுகளை நிலச்சரிவால் சேதமடைந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை விநியோகித்தது.

இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நடிகை நிகிலா விமல் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நிகிலா விமல், மலையாளம். தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள நடிகையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்