எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
என்னை சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.;
சென்னை,
ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்', விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி', மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
தற்போது இவர் நடிப்பில் தமிழில் தக் லைப் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திலும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல காதாபாத்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள 'ஹலோ மம்மி' என்னும் மலையாள படம் இன்று வெளியாகி உள்ளது. இதனை விளம்பரப்படுத்த ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணம் குறித்த தனது பார்வையை கூறி இருக்கிறார்.
எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. 8, 10, 25 வயதில் கூட திருமணம் என்பது எனக்கு கனவு போன்றது. குருவாயூர் கோவிலில் திருமணம் செய்வதை நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால் நான் வளர்ந்த பிறகு என்னுடைய பார்வை மாறிவிட்டது. நீண்ட யோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னை சுற்றியுள்ள நட்பு வட்டாரத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள் யாருமே நிம்மதியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளனர்.
எனக்கு தற்போது 34 வயதாகிறது. திருமணம் செய்துகொள்ள சொன்ன என் தாயிடம் மேட்ரிமோனியில் ஒரு கணக்கை தொடங்க சொன்னேன். அவரும் தொடங்கிவிட்டார். ஆனால் அதில் என் புகைப்படத்தை பார்த்த பலரும் அது போலி என நினைத்துக் கொண்டனர். ஆனால் உண்மையிலேயே எனக்கு மேட்ரிமோனியில் கணக்கு உள்ளது என ஐஸ்வர்யா லட்சுமி புன்னகையுடன் கூறினார்.