இந்தியாவில் அடுத்த மாதம் ரீ-ரிலீஸாகிறது கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லார்'
'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.;
சென்னை,
பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் திரைப்படம் 'இன்டர்ஸ்டெல்லார்'. வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தில் ஆனி ஹாத்வே மற்றும் மேத்யூ மெக்கோனாஹே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திரைப்படம் உள்நாட்டில் 18.8 கோடி அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 1,500 கோடி ரூபாய்) உலகம் முழுவதும் 73 கோடி அமெரிக்க டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
கோட்பாட்டு வானியல் இயற்பியல் மற்றும் அறிவியல் துல்லியத்தின் யதார்த்தமான சித்தரிப்புக்காக இந்த திரைப்படம் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டது. படத்தில் இடம்பெற்ற கருந்துளைகள், விண்வெளிப் பயணம் மற்றும் பல்வேறு கிரகங்களின் சித்தரிப்பு ஆகியவை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இந்நிலையில், 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம் அடுத்த மாதம் 7ம் தேதி இந்தியாவில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கடந்த டிசம்பரில் ரீரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், 'புஷ்பா 2' பட ரிலீஸால் ஐமேக்ஸ் உள்ளிட்ட போதிய திரையரங்குகள் கிடைக்காததால் இந்தியாவில் அப்போது ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.