ரிஷப் ஷெட்டியின் 'ஜெய் அனுமான்' படத்திற்கு வந்த சிக்கல்?
ஜெய் அனுமான் பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கிய 'அனுமான்' படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படம் உருவாகி வருகிறது. இதில் அனுமானாக காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், இப்படத்திற்கு சட்ட ரீதியாக சிக்கல் வந்துள்ளது. அதன்படி, ஐதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஜெய் அனுமான் பட தயாரிப்பாளர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஜெய் அனுமான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனுமானை தவறாக சித்தரித்திருப்பதாகக் குற்றம் சாட்டி மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜெய் அனுமான் படகுழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருமலா ராவ் என்ற வழக்கறிஞர் நம்பப்பள்ளி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது