'கேம் சேஞ்சர்': 'என் கதாபாத்திரத்தை பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்' - நவீன் சந்திரா
'பட்டாஸ்' படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நவீன் சந்திரா தற்போது 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்பட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், அறிமுக இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகி உள்ளது.
இப்படத்தைத்தொடர்ந்து, இவர் நடித்து வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராம் சரண் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நவீன் சந்திரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ' அனைவரும் ரசிக்கும் அருமையான படமாக 'கேம் சேஞ்சர்' இருக்கும். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன். திரையில் ரசிகர்கள் என்னை கண்டுபிடித்தால் ஆச்சரியப்படுவேன். அவர்களும் என்னை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.
இயக்குனர் ஷங்கர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் படத்தில் பணியாற்றுவது என் கனவாக இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது' என்றார்.