நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஐ.பி.எல் போட்டிகளை பேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பிய வழக்கில், அச்செயலியின் விளம்பர தூதரான நடிகை தமன்னாவிடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.;
கவுகாத்தி,
பேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். மகாதேவ் ஆன்லைன் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் உருவாக்கினர். இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பேர்பிளே செயலிக்கான விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை தமன்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை பேர்பிளே செயலியில் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்ய உதவியதால், தங்கள் நிறுவனத்திற்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்தது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் அமலாக்கத்துறை இயக்குநரகம் நடிகை தமன்னாவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். ஆனாலும் விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.