5 பாடல்களுக்கு ரூ.92 கோடி செலவு செய்த இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது.;
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் 'கேம் சேஞ்சர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.
இப்படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு மட்டுமே சுமார் ரூ.92 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் 'ரா மச்சா மச்சா' என்ற பாடலுக்கு மட்டுமே ரூ.20 கோடி செலவு செய்துள்ளனர். இந்திய சினிமாவிலேயே இதுவரை ஒரு பாடலுக்கு மட்டும் இவ்வளவு பணம் செலவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.