விஜய், சமந்தா உள்ளிட்ட சிலருக்கு நான் ஆண்டனியை காதலிப்பது ஏற்கனவே தெரியும் - கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தனது பள்ளிக்கால நண்பரான ஆண்டனியை கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்;
சென்னை,
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது 'ரிவால்வர் ரீட்டா', 'கண்ணி வெடி' ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இதனையடுத்து, இருவரது திருமணம் கடந்த மாதம் 12-ம் தேதி கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
இந்நிலையில், விஜய், சமந்தா உள்ளிட்ட சிலருக்கு தான் ஆண்டனியை காதலிப்பது ஏற்கனவே தெரியும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நானும் ஆண்டனியும் காதலிப்பதை மறைமுகமாக வைத்திருக்க விரும்பினேன். என்னுடைய நெருங்கிய நண்பர்கள், சினிமாவில் சிலரை தவிர யாருக்குமே அது தெரியாது. சினிமாவில் விஜய், சமந்தா, ஜெகதீஷ், அட்லி, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட சிலருக்கு நாங்கள் காதலிப்பது ஏற்கனவே தெரியும்' என்றார்.