பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக 'புஷ்பா 2' படக்குழு அறிவித்துள்ளது.;

Update: 2025-01-03 12:19 GMT

ஐதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பினர். நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி போலீசாரால் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் பதிலளித்தார்.

நாம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு வழங்கிய 14 நாள் காவல் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 27-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நிரந்தர ஜாமீன் வழங்க கேட்டு கொண்டனர். ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க போலீசார் கால அவகாசம் கேட்டதால், இவ்வழக்கு விசாரணை டிசம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனுவை எதிர்த்து போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு மீது வரும் ஜனவரி 3-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாம்பள்ளி நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  அல்லு அர்ஜுன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அசோக் ரெட்டி, அல்லு அர்ஜுன் வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இதற்கு முன்னதாக, ஹிந்தி திரைப்படமான ரயீஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியிலும் ஒருவர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்தில் நடிகர் மீது மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்று அசோக் ரெட்டி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ 1 லட்சம் பிணைத்தொகை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்