அவதூறு பரப்பும் வீடியோக்கள்; யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்

அவதூறு பரப்பும் வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.;

Update:2024-11-23 18:18 IST

சென்னை,

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் கதீஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் தனது தந்தையை போல் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான்-சாய்ரா தம்பதியினர் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரகுமானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இந்த சூழலில், இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்