அல்லு அர்ஜுனுக்கு போலீஸ் நோட்டீஸ்.. நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க கெடுபிடி
நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் சிறுவனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ள நிலையில் போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.;
ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ரேவதி உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.
4 வாரம் இடைக்கால ஜாமீன் விரைவில் முடிய இருந்த நிலையில் நம்பள்ளி நீதிமன்றம் கடந்த 3ம் தேதி அல்லு அர்ஜுனுக்கு வழக்கமான நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு இரண்டு மாதங்களுக்கு அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரையில் ஆஜராக வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் மகன் தேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் தேஜ் உடல்நலம் தேறி வருகிறது.
சிகிச்சையில் உள்ள ஸ்ரீதேஜை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் இன்று முடிவு செய்தார். இதையடுத்து ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் 'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்புடன் சிறுவனை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஒத்துழைக்க மறுத்தால், அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என அதில் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது வழக்கறிஞர் குழுவின் ஆலோசனையை ஏற்று மருத்துவமனைக்கு செல்லும் முடிவை ரத்து செய்தார்.