ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர்கள் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம்

45-வது படத்திற்கான வேலையில் நடிகர் சூர்யா இறங்கியுள்ளார்.;

Update:2024-11-28 01:57 IST

கோவை,

நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 14-ந் தேதி 'கங்குவா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் சினிமா ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து 45-வது படத்திற்கான வேலையில் நடிகர் சூர்யா இறங்கியுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படத்தை இயக்கி நடித்த ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 45-வது படத்திற்கான பூஜை கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா மற்றும் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் பட்டு வேட்டி, சட்டையுடன் ரசிகர்கள் படைசூழ படக்குழுவினருடன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை, கோவில் சார்பாக அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார்.

அதன்பின்னர் கோவிலில் படத்திற்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கேமரா, கிளாப் போர்டு உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது நடிகர்கள் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சூர்யா வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் கோவிலில் குவிந்து அவருடன் போட்டிபோட்டு செல்பி, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்