காசாவுடனான எல்லையை திறக்க எகிப்துக்கு இஸ்ரேல்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

காசாவுடனான எல்லையை திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி என தகவல்...!

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 10வது நாளாக போர் நீடித்து வருகிறது. காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதேவேளை, போர் தொடங்கிய ஓரிரு நாளில் ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வந்தது.

காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், காசாவின் ரபா நகர் எல்லையை இன்று திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இந்த எல்லை வழியாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவி பொருட்களை எகிப்து எல்லை வழியாக காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகக்குறுகிய நேரம் மட்டுமே இந்த எல்லை திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எகிப்துடனான எல்லை திறக்கப்படும்போது தெற்கு காசா பகுதியில் எந்த வித தாக்குதலும் நடத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரபா நகர எல்லையை இன்று காலை 10 மணி முதல் (தற்போது இஸ்ரேல் நேரம் 9.45) திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-16 06:48 GMT

Linked news