இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: இந்திய பங்கு சந்தை ஏற்றம்பெறுமா?
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.;
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த மாதம் ஜூன் 4ம் தேதி இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது. நிப்டி, 1000 புள்ளிகள், சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் காண தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் அதிகம் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால், இந்திய பங்குச்சந்தை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்தது.
இந்நிலையில், நடப்பு 2024-25ம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடியின் 3வது ஆட்சிகாலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். அதேவேளை, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை ஏற்றம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய பங்குசந்தையில் நிப்டி 50 நேற்றைய வர்த்தக நேர முடிவில் 24 ஆயிரத்து 509 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 280 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 80 ஆயிரத்து 50 புள்ளிகளிலும், பின் நிப்டி 23 ஆயிரத்து 626 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 412 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 1 புள்ளிகளிலும் நிறைவடைந்தது.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதால் இந்திய பங்குசந்தையில் பரலவலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்குதலுக்கு முன் இந்திய பங்கு சந்தை காலை நேரத்தில் சற்று ஏற்றம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் அடிப்படையில் பங்குசந்தை நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம். கடந்த சில வாரங்களாக இந்திய பங்குசந்தை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால், பட்ஜெட் தாக்கலுக்குபின் இந்திய பங்கு சந்தை வீழ்ச்சியையும் சந்திக்கலாம். இதனால், வர்த்தகர்கள் இன்று பங்குசந்தை வர்த்தகத்தை கவனத்துடன் கையாள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.