வேலை செய்யும் நேரத்தைவிட பணியின் தரமே முக்கியம்: ஆனந்த் மகிந்திரா

எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று கேட்க வேண்டாம் பணியின் தரம் எப்படி? என்பதைக் கேளுங்கள் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்;

Update:2025-01-12 17:53 IST

புதுடெல்லி,

கடந்த சில நாள்களுக்கு முன், இன்போசிஸ் இணை நிறுவனர் என். ஆர். நாராயணமூர்த்தி வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசியது விவாதப்பொருளானது. நாராயணமூர்த்தியின் கருத்தை பலரும் விமர்சித்த நிலையில் எல் அண்ட் டி தலைவர் எஸ். என். சுப்ரமணியன் தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியிருக்கிறது. எஸ். என். சுப்ரமணியன் கூறுகையில்,"வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்பட 90 மணி நேரம் பணியாற்ற வேண்டும். வீட்டில் உங்கள் மனைவியை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும் உங்களால்? அதற்கு பதிலாக வேலைக்குச் செல்லலாம்' என்று பேசினார். எஸ்.என். சுப்பிரமணியன் பேச்சும் கடுமையாக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், "எத்தனை மணி நேரம் பணிபுரிகிறேன் என்று என்னிடம் கேட்காதீர்; என் பணியின் தரம் எப்படி? என்பதைக் கேளுங்கள்" என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார். நாடறிந்த தொழிலதிபரான ஆனந்த மகிந்திரா இது தொடர்பாக கூறியதாவது:- "எனது மனைவி அற்புதமானவர், அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.

உங்களுடைய வீட்டிலும், அதேபோல உங்கள் நண்பர்களுடனும் நீங்கள் நேரம் செலவழிக்காமல் இருந்தால், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு சரியான ஆலோசனைகள் எப்படி கிடைக்கும்?நீங்கள் மேலாண்மை படிப்பில் ஒரு முதுநிலைப் பட்டதாரியானாலும் சரி, ஒரு பொறியியல் பட்டதாரியானாலும் சரி.., கலை, கலாசாரம் பற்றி கட்டாயம் படித்தாக வேண்டும்.நாங்கள் கலைக்கும் கலாசாரத்துக்கும் ஆதரவு அளிக்கிறோம். ஏனெனில், இதுதான், நாம் எந்தவொரு முடிவெடுக்கும்போதும் நம் மூளையின் முழு திறனையும் செயல்பட வைத்து மேம்பட்ட முடிவுகளை எடுக்க வைக்க உதவும்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்