ஹிண்டன்பர்க் தாக்கத்தை ஏற்படுத்தியதா?; ஏற்ற இறக்கத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் நிறைவடைந்தது.

Update: 2024-08-12 11:24 GMT

 மும்பை,

அமெரிக்காவை சேர்ந்த ஷாட் செல்லிங் (Short Selling) நிறுவனம் ஹிண்டன்பர்க். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்கள் நிதி முறைகேடுகள் செய்வதாக கூறி ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிடுகின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் அதானி குழுமத்தை குறி வைத்தது. அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அப்போது, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. அதேபோல், இந்திய பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்தது.

இதனிடையே, அதானி குழுமத்தை குறிவைத்து ஹிண்டன்பர்க் கடந்த சனிக்கிழமை மீண்டும் அறிக்கை வெளியிட்டது. அதேபோல், செபி அமைப்பையும் குறிவைத்து அறிக்கை வெளியிட்டது. இதனால் இன்று திங்கட்கிழமை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் தொடங்கியது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கத்தால் சற்று சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை காலை 10 மணி முதல் ஏற்றம்பெற தொடங்கியது.

காலை முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றது. ஆனால், இந்திய பங்கு சந்தை வர்த்தக இறுதியில் ஏற்ற, இறக்கத்துடன் நிறைவடைந்தது.

குறிப்பாக, காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 149 என்ற புள்ளிகள் வரை சரிந்து பின்னர் ஏற்றம்பெற தொடங்கியது. இன்றைய குறைந்தபட்ச புள்ளியில் இருந்து பேங்க் நிப்டி சுமார் 700 புள்ளிகள் வரை ஏற்றம்பெற்று அதிகபட்சமாக 50 ஆயிரத்து 830 புள்ளிகள் வரை வர்த்தகமானது. இதையடுத்து, வர்த்தக இறுதியில் பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 577 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேபோல், காலை சரிவுடன் தொடங்கிய பின் நிப்டி 22 ஆயிரத்து 830 என்ற புள்ளிகள் வரை சரிந்து காலை 10 மணி முதல் ஏற்றம்பெற தொடங்கியது. சுமார் 300 புள்ளிகள் வரை ஏற்றம்பெற்ற பின்நிப்டி அதிகபட்சமாக 23 ஆயிரத்து 158 என்ற புள்ளிவரை வர்த்தகமானது. பின்னர், வர்த்தக இறுதியில் 23 ஆயிரத்து 28 என்ற புள்ளிகளில் பின்நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மிட்கேப் நிப்டி வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த நிலையில் காலை 10 மணியில் இருந்து ஏற்றம்பெற தொடங்கியது. 12 ஆயிரத்து 471 என்ற புள்ளிகள் வரை சரிவை சந்தித்த மிட்கேப் நிப்டி வர்த்தகத்தின்போது சுமார் 200 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரத்து 686 புள்ளிகள் வரை வர்த்தகமானது. பின்னர், வர்த்தக இறுதியில் 12 ஆயிரத்து 652 என்ற புள்ளிகளில் மிட்கேப் நிப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பேங்க் எக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த நிலையில் பின்னர் ஏற்றம்பெற தொடங்கியது. 57 ஆயிரத்து 83 என்ற புள்ளிகள் வரை சரிவுடன் வர்த்தகமான நிலையில் பின்னர் ஏற்றம்பெற தொடங்கியது. சுமார் 900 புள்ளிகள் வரை ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 893 புள்ளிகள் வரை வர்த்தகமானது. பின்னர் வர்த்தக இறுதியில் பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 652 என்ற புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஆனால், நிப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலை 24 ஆயிரத்து 212 என்ற புள்ளிகள் வரை சரிவை சந்தித்த நிப்டி பின்னர் ஏற்றம்பெற தொடங்கியது. நிப்டி 200 புள்ளிகள் ஏற்றம்பெற்று 24 ஆயிரத்து 472 என்ற புள்ளிவரை வர்த்தகமானது. ஆனால், வர்த்தக இறுதியில் சற்று இறக்கமடைந்த நிப்டி 24 ஆயிரத்து 374 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேபோல், சென்செக்ஸ் வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தது. காலை 79 ஆயிரத்து 226 என்ற புள்ளிகள் வரை சரிவை சந்தித்த சென்செக்ஸ் சுமார் 1,000 புள்ளிகள் ஏற்றம்பெற்றது. அதன்படி, 80 ஆயிரத்து 106 என்ற புள்ளிகள் வரை சென்செக்ஸ் வர்த்தகமானது. பின்னர், வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் சற்று சரிவுடன் 79 ஆயிரத்து 648 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வர்த்தக தொடக்கத்தில் சரிவில் இருந்த பங்குச்சந்தை அதிரடியாக மீண்டு ஏற்றம்பெற்றது. பின்னர் வர்த்தக இறுதியில் சற்று இறக்கத்துடன் நிறைவடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்