நாளுக்குநாள் புதிய உச்சம் தொடும் இந்திய பங்கு சந்தை
இந்திய பங்கு சந்தை நாளுக்குநாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது.;
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது. நிப்டி 1000 புள்ளிகள், சென்செக்ஸ் 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி முதல் இந்திய பங்கு சந்தை ஏற்றம் காண தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர் இந்திய பங்குகளில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் இந்திய பங்கு சந்தை நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய பங்கு சந்தை இன்றும் (ஜூலை 16) புதிய உச்சம் கண்டுள்ளது. டெலிகாம் மற்றும் ஐடி பங்குகள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவதால் பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது.
அந்த வகையில் நிப்டி 50 74.55 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 661.25 என்ற புதிய உச்சம் தொட்டது. பின்னர், வர்த்த இறுதியில் 24 ஆயிரத்து 613 என்ற அளவுடன் நிறைவடைந்தது.
அதேபோல், சென்செக்ஸ் வர்த்தக நேரத்தில் 233.44 புள்ளிகள் வரை உயர்ந்து 80 ஆயிரத்து 898.30 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், வர்த்தக இறுதியில் 80 ஆயிரத்து 716.55 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
அதேவேளை, பேங்க் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது. 52 ஆயிரத்து 466 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 619 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது. நண்பகலில் சரிவை சந்தித்த பேங்க் நிப்டி வர்த்தக இறுதியில் 59.10 புள்ளிகள் சரிந்து 52 ஆயிரத்து 396 புள்ளிகளில் நிறைவடைந்தது.
2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் 23ம் தேதி (செவ்வாய்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்திய பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்து வருகின்றனர்.
சென்செக்ஸ் பங்குகளில், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக லாபத்துடன் வர்த்தகமாகின.
மறுபுறம், கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பவர் கிரிட் ஆகியவை பின்னடைவை சந்தித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) திங்களன்று ரூ.2 ஆயிரத்து 684.78 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என்று பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஷாங்காய் ஆகியவை உயர்வுடன் நிலைபெற்றன. திங்களன்று அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலையில் முடிவடைந்தன.
உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.80 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 84.13 அமெரிக்க டாலராக உள்ளது. முகரம் பண்டிகைக்காக நாளை (புதன்கிழமை) பங்குசந்தைகளுக்கு விடுமுறை ஆகும்.
இந்திய பங்கு சந்தை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டுவரும் நிலையில் பட்ஜெட் தாக்கலுக்குபின் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பட்ஜெட்டிற்கு பின் இந்திய பங்கு சந்தைகள் இறக்கமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.