பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்
நாட்டின் பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் இன்று காலமானார்.
புதுடெல்லி,
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன் (வயது 98). வயது முதிர்வால் சென்னையில் இன்று காலை 11.20 மணிக்கு அவர் காலமானார்.
பசுமை புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார். நாட்டில் பஞ்சம் போன்ற காலங்களில் விவசாயிகள் மற்றும் அரசின் கொள்கைகளுடன் இணைந்து, பிற விஞ்ஞானிகள் உதவியுடன் ஒரு சமூக புரட்சியை ஏற்படுத்தினார்.
அவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றி உள்ளார். 40-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். இவருடைய மகள் சவும்யா சுவாமிநாதனும் விஞ்ஞானியாக உள்ளார்.
அவருடைய மறைவு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மக்களுக்கும் வேதனை ஏற்படுத்தி உள்ளது.