புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை
அமைதியாக இருந்து கொண்டு அரிய பணிகளைச் செய்யும் கன்னி ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, குடும்ப ஸ்தானத்தில் கேது பலம் பெற்றிருக்கிறார். 8-ல் ராகு சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கும்.
கன்னி - சுக்ரன் சஞ்சாரம்
புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்கு வரும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்தியாக இருக்காது. பெற்றோர் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துகளைப் பிரித்துக்கொள்ள முன்வருவீர்கள். ஆனாலும் அது பாதியிலேயே நிற்கலாம். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி - புதன் சஞ்சாரம்
புரட்டாசி 16-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர். பயணங்கள் பலன் தரும். பணப்பற்றாக்குறை அகலும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரலாம். பிள்ளைகள், மனைவிக்கு வேலை கிடைத்து வருமானம் அதிகரிக்கும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
புரட்டாசி 22-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் இந்த நேரம் புதிய தொழில் வாய்ப்புகள் கைகூடும். கடன் சுமை ஓரளவு குறையும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் வீடு கட்டுவது, வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
செவ்வாய், சனி பார்வை இருப்பதால் ஒருசில சமயங்களில் மனக்குழப்பம் அதிகரிக்கலாம். பணப்புழக்கத்திலும் தடைகள் வரலாம். 6-க்கு அதிபதியான சனியை, எட்டுக்கு அதிபதியான செவ்வாய் பார்ப்பதால் விபரீத ராஜயோக அடிப்படையில் ஒருசில காரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.
சனி வக்ர நிவர்த்தி
புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகின்றார். இக்காலத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் புதிய திருப்பங்கள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி நிலை மாறும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அற்புதமான நேரமிது. புதிய ஒப்பந்தங்கள் வரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். இனிய வாழ்வமைய எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இம்மாதம் சூரிய பகவான் வழிபாடு காரிய வெற்றி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- செப்டம்பர்: 20, 21, 29, 30, அக்டோபர்: 2, 3, 13, 14.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களோ, இடமாற்றங்களோ வரலாம். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரியாகிவிடும். குரு பார்வை இருப்பதால் பிள்ளைகள் அல்லது உடன்பிறப்புகள் வழியில் சுபகாரியப் பேச்சு கைகூடலாம். சனி பகவான் வக்ர இயக்கத்தில் பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.