மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
பொறுமையாக செயல்பட்டு பெருமை காணும் கன்னி ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். 2ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரித்து சர்ப்பதோஷத்தை உருவாக்குகிறார்கள். எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை ஏற்பட்டாலும், குருவின் பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. குரு உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, 3, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். எனவே சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இருந்த தடை அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் கட்டிவைத்த சிதிலமடைந்த கோவில்களை, பழுதுபார்க்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகமான புதன், 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். நாடு மாற்றம், வீடு மாற்றம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். தொழிலில் இருந்த இடையூறு அகலும்.
மீன - புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். மேலும் அங்கு குருவோடு இணைந்து 'நீச்ச பங்க'மும் அடைகிறார். ராசிநாதன் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை உண்டு என்றாலும், மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ள இயலும். தொழில் மாற்றம் அல்லது புதிய பங்குதாரர்களின் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத் தில் மேலதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்திசெய்வர்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மேஷ ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், 8-ல் மறைவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் உருவாகலாம். 'உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய முடியவில்லையே' என்ற கவலை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள், உங்கள் மீது குற்றம் சுமத்தக்கூடும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் மேலோங்கும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலக நேரிடலாம். வாங்கிய இடத்தை ஒருசிலர் விற்கவும் வாய்ப்புள்ளது. வழக்குகள், வாய்தாக்கள் வந்து கொண்டேயிருக்கும். மன அமைதி குறையும். பிறருக்கு பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 16, 17, 28, மார்ச்: 1, 4, 5, 11, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குருவின் பார்வையால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களும், அனுபவஸ்தர்களும் சொல்லும் ஆலோசனைகள் கைகொடுக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். வீடுகட்டுவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்க்க எடுத்த முயற்சி கைகூடும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தாய்வழி ஆதரவு உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு மாதக்கடைசியில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம்.