ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை
விருந்தினர்களை உபசரிப்பதில் வல்லவர்களாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே சர்ப்ப தோஷத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். புது முயற்சிகளை யோசித்து செய்யுங்கள்.
சிம்ம - சூரியன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில், விரயாதிபதியான சூரியன் மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். பிரபலமானவா்களை நம்பி செய்த காாியங்களில் பிரச்சினை ஏற்படலாம். சுபகாரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கன்னி - புதன் சஞ்சாரம்
ஆவணி 8-ந் தேதி உங்கள் ராசிக்கு வரும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். எனவே உங்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நேரம் இது. ராசிநாதன் புதன் பலம் பெறும் இந்த நேரத்தில் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். உடல்நலம் சீராகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
வக்ர புதன் சஞ்சாரம்
ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் என்பதால் வக்ர காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணி அமையும்.
சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்
ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறாா். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 12-ம் இடம் வரும்பொழுது குடும்பச்சுமை கூடும். குடியிருக்கும் வீட்டால் சில பிரச்சினைகள் உருவாகும். தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களும், பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களும் கவனமாக செயல்படுங்கள்.
குரு வக்ரமும், சனி வக்ரமும்
மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவதால், சில நற்பலன்கள் கிடைக்கும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக மாறும். இல்லத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சனியின் வக்ர காலத்தில் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியத் தொல்லையும் உண்டு.
இந்த மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு செய்து வந்தால் துயரங்கள் விலகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 25, 26, 31, செப்டம்பர்: 1, 5, 6, 16, 17 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குருவும், சனியும் வக்ரமாக இருப்பதால் குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.