ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
சேவை செய்வதில் முன்னுதாரணமாகத் திகழும் சிம்ம ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் சுபகாரியங்கள் நடைபெறலாம்.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். லாபாதிபதி புதன் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரமாகும். சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புள் கிடைக்கும்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
ஆனி மாதம் 12-ந் தேதி, மேஷ ராசிக்குச் செவ்வாய் செல்கிறார். மேஷம் செவ்வாய்க்குச் சொந்த வீடாகும். இதுவரை சனியின் பார்வையில் இருந்த செவ்வாய், இப்பொழுது விலகுவதால் எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கப் போகிறது. யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் சொந்த வீட்டில் பலம்பெறும் பொழுது, சொத்து, சொந்தம், காரிய வெற்றி, வருமானம் போன்றவற்றில் திருப்தி நிலவும். சென்ற மாதத்தில் தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியான புதன், விரய ஸ்தானத்திற்கு வரும் போது, கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். நீண்ட நாட்களுக்கு முன் தோன்றிய நோய் மீண்டும் தலைதூக்கும். செலவு அதிகரிக்கும். வெளிநாடு சென்றவர்கள், சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை ஏற்படும்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், மிதுனத்திற்கு வரும் போது நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வீடு வாங்கும் அல்லது கட்டும் முயற்சி கைகூடும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம். இல்லத்தில் மங்கல ஓசை மற்றும் மழலையின் ஓசை கேட்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள்.
இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் கற்பக விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 24, 25, 28, 29, ஜூலை: 6, 7, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்பட்டு அகலும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு உருவாகாமல் இருக்க, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகள் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். பணப்பற்றாக்குறை ஏற்படாது என்றாலும் மனநிம்மதி குறையும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.