இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதி

அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் ஆரம்பித்தால் கைமேல் பலன் உண்டு.

Update: 2024-12-04 09:59 GMT

இறைவனை வழிபடுவதற்கு எல்லா திதிகளும் விசேஷமானவைதான் என்றாலும், பவுர்ணமி, அஷ்டமி முதலான திதிகளில் செய்யப்படும் வழிபாடுகளின் பெருமைகள் பற்றி புராணங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பவுர்ணமி மற்றும் அஷ்டமி தினங்கள் சிவ வழிபாட்டுக்கு உரியவை.

சிவனுடைய வடிவங்களை, போக வடிவம், யோக வடிவம், கோப வடிவம் என மூன்றாக வகைப்படுத்துவர். தீமைகளை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வீர வடிவங்களைத்தான், வேக வடிவம் என்பர். அவற்றை பைரவ கோலம் என்ற பொதுச் சொல்லால் குறிப்பதும் உண்டு. பைரவர், சரபர், ஆபத்துத்தாரணர், க்ஷேத்ரபாலர் முதலான வடிவங்கள் சிவ பெருமானுடைய வேக வடிவங்களாகும்.

பவுர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில் சிவபெருமானின் பைரவக் கோலங்களை வழிபடுவது சிறப்பு. அதிலும் அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. அஷ்டமி திதியில் விரதமிருந்து இறைவனை வழிபட, பல்வேறு நலன்களைப் பெறலாம் என சிவமகாபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அஷ்டமி என்பது திதிகளில் எட்டாவது ஆகும். அதிலும் தேய்பிறை அஷ்டமி திதி வழிபாட்டுக்கு மிகவும் விசேஷமானதாகும். அந்த நாட்களில் விரதமிருந்து பைரவரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் ஆரம்பித்தால் கைமேல் பலன் உண்டு.

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் (மாலை 4.30-6) பைரவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, வழக்குகள், கடன் பிரச்சினைகள் தீரும். புதன் கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து வழிபட, இழந்ததைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்