ஸ்ட்ரோக் - புரிந்து கொள்வோம்! முடங்காமல் வாழ்வோம்!!

ஸ்ட்ரோக் வந்தவர்கள் பக்கவாதம் வந்து ஒரு பக்கம் முழுவதும் செயல் இழந்தோ அல்லது ஒரு சில இயக்கங்கள் இல்லாமலோ இருக்கலாம்.;

Update:2023-11-07 16:39 IST

நரம்பியல் நிபுணர் மருத்துவர் பானு

எண்ஜாண் உடலுக்கு சிரசே பிரதானம். சிரசு ஏன் பிரதானம் என்றால், இங்கு தான் மூளை இருக்கிறது. மூளை தான் நம் உடலையும் மனதையும் முழுமையாக இயக்குகிறது. இந்த மூளை ஒரு நொடிப்பொழுது தன் வேலையை நிறுத்தினால் கூட உடலின் இயக்கம் பெரிதளவு பாதிக்கப்படும். இவ்வாறு மூளை தன் செயல்பாட்டை சில சமயங்களில் இழப்பதுண்டு. இதனைத் தான் ஸ்ட்ரோக் என்று அழைக்கிறோம்.

இவ்வாறு ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும்போது உடனடியாக செய்ய வேண்டியது என்ன, இதற்கான அறிகுறிகள் மற்றும் மருத்துவம் என்ன என்பதை பற்றி காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் பானு அவர்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் பின் வருமாறு,

இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது ஒரு பகுதி இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இதே போல் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது, ரத்த ஓட்டம் தடைப்பட்டு எந்தப் பகுதி மூளை செயலிழகிறதோ அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் அது நிறுத்தி விடுகிறது. இதுவே ஸ்ட்ரோக். எனவே தான் ஸ்ட்ரோக்கினால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பக்கவாதம், நடப்பதில் தள்ளாட்டம், கண்பார்வை மங்கி விடுவது, பேச்சு தடைபடுவது, விழுங்குவதில் சிரமம், கை கால் மரத்து விடுவது, கை கால்களை அசைக்க முடியாமை என்று இதன் அறிகுறிகள் பலவிதமாக இருக்கும்.

மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளான வேர்த்து கொட்டுவது, நெஞ்சுவலி, வலி கைகளுக்கு பரவுவது போன்றவைகளை வைத்து மாரடைப்பை பொதுவாக மக்கள் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு அறிகுறிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளை எப்படி தெரிந்து கொள்வது?

ஒருவருக்கு ஸ்ட்ரோக் வந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுதான் BE FAST.

B என்பது பேலன்ஸ் (BALANCE) அதாவது தள்ளாட்டம் என்றும்,

E என்பது ஐ (EYE) பார்வை கோளாறு என்பதும்

F என்பது ஃபேஸ் (FACE) முக தசையை அசைக்க முடியாமை மற்றும் வாய் கோணலாக இயங்குவது என்றும்

A என்பது (ARM) கைகளை அசைக்க முடியாமை, மேலே தூக்க முடியாமை என்பதும்

S என்பது ஸ்பீச் (SPEECH) அதாவது பேச முடியாமை என்றும்

T என்பது டைம் (TIME) அதாவது ஒவ்வொரு மணித்துளியும் இதில் முக்கியம் என்பதையுமே குறிக்கிறது.

ஸ்ட்ரோக் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

முதல் நாலரை மணி நேரத்திற்குள் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இதே போல் 16 முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்தக்கட்டை அகற்ற வேண்டும் என்று, இந்த சிகிச்சையில் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலே கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவமனை எனும்போது குறைந்தபட்சம் ஒரு சிடி ஸ்கேன் வசதியாவது (எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் வசதியும் இருந்தால் நல்லது) இருக்கக்கூடிய மருத்துவமனையாக அது இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஸ்ட்ரோக் எங்கே ஏற்பட்டிருக்கிறது, அதன் தன்மை என்ன, அதன் பாதிப்பு என்ன? என்பதை கணிக்க முடியும். ஏனென்றால் ஸ்ட்ரோக்கின் தன்மைக்கு ஏற்ப அதற்கான சிகிச்சை மாறுபடுகிறது.

ஸ்ட்ரோக்கின் வகைகளும் சிகிச்சையும்

ஸ்ட்ரோக்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று, இஸ்கிமிக் ஸ்ட்ரோக். இது ரத்தக்குழாயில் ரத்தம் உறைவதால் ரத்தக் கட்டி ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவது. மற்றொன்று ஹெமரேஜ்ஜிக் ஸ்ட்ரோக். இதில் ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் கசிந்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் தடைபடுவது. இவை இரண்டிற்கும் சிகிச்சை மாறுபடும். ரத்தக்கட்டிற்கு த்ரோம்பாலிடிக் (கிளாட் பஸ்டிங்) மருந்துகளை உடலில் செலுத்தி கரைக்க வேண்டும். இந்த மருந்தை கொடுப்பதற்கு முன் நோயாளிக்கு பல பரிசோதனைகளை செய்து இம்மருந்தை அவர் உடல் ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்த பிறகு செலுத்த வேண்டும். இந்த ரத்தக் கட்டு, மருந்தினால் கரைக்க முடியாத அளவிற்கு பெரிதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு மெக்கானிக்கல் த்ராம்பேக்டமி என்ற முறையில் ரத்தக்கட்டை நீக்க முடியும்.

யாருக்கெல்லாம் ஸ்ட்ரோக் வரலாம்?

60 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு ஸ்ட்ரோக் வரலாம். பெண்களை விட ஆண்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம். மேலும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பழக்கம் குடிப்பழக்கம், இதய நோய் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு எல்லாம் ஸ்டோக் வரும் அபாயம் உண்டு. இப்பொழுதெல்லாம் மேலே கூறிய காரணிகள் 40 வயது உள்ளவர்களுக்கே இருக்கிறது என்பதால், இளம் வயதினருக்கே ஸ்ட்ரோக் வரும் அபாயம் உள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். எனவே ரத்த அழுத்தம் நீரிழிவு இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் அதை அலட்சியப்படுத்தாமல் சரியான சிகிச்சை எடுத்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது.

இதே போல் ஸ்ட்ரோக் ஏற்படும்பொழுது அது மிக சிறிய ரத்தக்குழாய்களையோ அல்லது பெரிய ரத்தக் குழாய்களையோ பாதிக்கலாம். சில நேரங்களில் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு முன்பு ஸ்ட்ரோக்கிற்கான அறிகுறிகள் தோன்றி கொஞ்ச நேரம் மட்டும் (சில நொடிகள், மணித்துளிகள்) இருந்து சரியாகிவிடும். இதை ட்ரான்ஸியன்ட் ஸ்ட்ரோக் என்கிறோம். இந்த மாதிரி அறிகுறிகள் வந்தவர்களுக்கு ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே மேஜர் ஸ்ட்ரோக் வரலாம். எனவே இவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சையை தொடங்கி விட்டால் ஸ்ட்ரோக் வருவதை தவிர்த்து விடலாம்.

ஸ்ட்ரோக் வந்தவர்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும்?

ஸ்ட்ரோக் வந்தவர்கள் பக்கவாதம் வந்து ஒரு பக்கம் முழுவதும் செயல் இழந்தோ அல்லது ஒரு சில இயக்கங்கள் இல்லாமலோ இருக்கலாம். வலது பக்க இயக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சும் புரிந்து கொள்ளும் தன்மையும் பாதிக்கப்படலாம். இப்படிப்பட்டவர் தன் பிரச்சனையை சொல்ல முடியாமலும் நாம் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கலாம். எனவே இவர்களை எப்படி படுக்க வைக்க வேண்டும், தூக்க வேண்டும், சாப்பாடு ஊட்ட வேண்டும், மலம் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்வது எப்படி? போன்றவற்றை உடன் இருப்பவர்கள் புரிந்து செய்ய வேண்டும். குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் இவர்களுக்கு அவசியம் வேண்டும். மருந்து மட்டுமின்றி பிசியோதெரபி மற்றும் தேவைப்பட்டால் ஸ்பீச் தெரப்பி போன்றவைகளும் இவர்களுக்கு அவசியம் வேண்டும். 20, 30 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட தற்பொழுது சிறப்பாய் வேலை செய்யும் மருந்துகளும், துல்லியமான பரிசோதனை முறைகளும், உதவி மருத்துவ முறைகளும் (சப்போர்ட்டிவ் தெரப்பி) சிறப்பாக இருப்பதால் ஸ்ட்ரோக் நோயாளிகளில் பெரும்பான்மையினர் முழுவதுமாகவே குணமடைகின்றனர்.

ஸ்ட்ரோக் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

மது, புகை, போதை பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கிய உணவும், ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, உடல் பருமன், இதய நோய், போன்றவைகளுக்கு சரியான சிகிச்சை எடுத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும், ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும் வழிமுறைகள். இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக இவற்றை கடைப்பிடித்தால் இளம் வயதிலேயே பிரச்சனைக்கு ஆளாக வேண்டி இருக்காது.

ஸ்ட்ரோக் வராமல் தடுத்துக் கொள்வது நம் கையில் இருக்கிறது. மேலே கூறியவற்றை பின்பற்றி ஸ்ட்ரோக் வராமல் தடுத்துக் கொள்வோம் அப்படியே அது ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் தரமான வாழ்க்கையை முழுவதுமாய் மீட்டெடுத்து வாழலாம் என்ற விழிப்புணர்வையும் மக்கள் பெறவேண்டும்" என்று கூறி முடித்தார் மருத்துவர் பானு அவர்கள்.

Dr Bhanu Kesavamurthy

Senior Consultant - Neurologist

Kauvery Hospital

Vadapalani

Chennai.

For Appointments Call : 044 - 4000 6000

மேலும் செய்திகள்