நம்பிக்கை அளிக்கக்கூடிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் கல்லீரல் சிறப்பு மருத்துவர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுவாதி ராஜு பேட்டியளித்துள்ளார்.

Update: 2024-04-24 05:38 GMT

Dr Swati Raju, Medical Gastroenterology, Hepatology & Liver Transplant Physician, Kauvery Hospital, Chennai

கல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. இது நம் உடலில் நடக்கக்கூடிய பெரும்பான்மையான செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது. ஜீரணமான உணவின் சத்துக்களை சரியான முறையில் பிரித்து எடுத்து மற்ற உறுப்புகளுக்கு அளிப்பதற்கும் தேவையானவற்றை சேமித்து வைப்பதற்கும், உடல் செயல்பாடுகளின் போது வெளியாகும் நச்சுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும் என்று ஒரு ரசாயன தொழிற்சாலையாக இரவும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கருணை உள்ள உறுப்பு நம் கல்லீரல். இது தாயைப் போல் நம்மை பாதுகாக்கிறது என்றும் கூறலாம். தாய் எப்படி நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்துவதில்லையோ அது போல தன்னுடைய பிரச்சனையை தானே தாங்கிக் கொண்டு மற்ற உறுப்புகளுக்கு தேவையானவற்றை செய்து கொண்டே இருக்கும். அதனால் தான் கல்லீரலுக்கு பிரச்சனை ஏற்பட்டு அது பெருமளவு பாதிக்கப்பட்ட பின்பே அறிகுறியை வெளிப்படுத்தி நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட கருணை உள்ள ஒரு உறுப்பான கல்லீரலை நாம் தான் முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும். அப்படி என்றால் கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அதைப் போக்கும் முறைகளைப் பற்றி நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

காவேரி மருத்துவமனையின் கல்லீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுவாதி ராஜு அவர்களை பேட்டி கண்டது பின்வருமாறு:-

கல்லீரலில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம்?

கல்லீரலில் வீக்கம் ஏற்படலாம். கொழுப்பு கோர்த்துக்கொண்டு அது பல கட்டங்களாக அதிகரித்து கல்லீரல் திசுக்களை பாதிக்கலாம். சிரோசிஸ் என்று அழைக்கப்படும் அழற்சி ஏற்படலாம். மற்றும் புற்றுநோய் கல்லீரலில் ஏற்படலாம். இதை தவிர வைரஸ் மற்றும் கிருமிகளின் தொற்றும் கல்லீரலில் ஏற்படலாம். மற்றும் கல்லீரலில் தொற்று அடைப்பு போன்றவற்றினால் மஞ்சள் காமாலையும் ஏற்படலாம்.

கல்லீரலில் ஏற்படும் இந்த பிரச்சனைகளுக்கு என்ன மாதிரியான தீர்வுகள் உள்ளன?

கல்லீரலில் பொதுவாக ஃபேட்டி லிவர்(fatty liver) என்று அழைக்கப்படும் கொழுப்பு கோர்த்துக்கொள்வது என்பது சகஜமாக எல்லா வயதினரிடையேயும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளது. இந்த கொழுப்பு கல்லீரலில் சேரும்பொழுது அது அதன் உள் இருக்கும் கல்லீரல் திசுக்களை செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது. இதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு கல்லீரல் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சரியான வாழ்க்கை முறை மாற்றங்களே சிறந்த பயனை அளிக்கும். சரிவிகித உணவு, அதாவது கொழுப்பு மற்றும் மாவுச்சத்து குறைவான ஆரோக்கியமான உணவு முறை இதற்கு அவசியம். மேலும் 30 முதல் 40 நிமிடங்களுக்கு குறையாத துரித உடற்பயிற்சி வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை செய்வதும் இந்த பேட்டி லிவர் பிரச்சனையை மாற்ற உதவும். மேலும் குடிப்பழக்கம் புகைப்பழக்கம் போன்றவைகளையும் அறவே தவிர்ப்பது இந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்காமல் குறைக்க உதவும். உடல் எடையை சரியான முறையில் வைத்துக் கொள்வதும் இந்த பிரச்சனையை தவிர்க்க அல்லது மாற்ற உதவும்.

தானாக மருந்துகள் எடுத்துக் கொள்வது, பாரசிட்டமால் போன்ற மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது போன்றவைகளும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரலில் ஏற்படும் அழற்சி, சிரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலின் செல்கள் அழிந்து போவதை குறிக்கிறது. பெரும்பான்மையாக குடிப்பழக்கமே இதற்கான காரணம் என்று கூறலாம். இதை தவிர நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய சிலவகை மருந்துகளும் சில தொற்றுகளினால் அடிக்கடி கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு தொடர்ந்து இருக்கும் பொழுது லிவர் சிரோசிஸ் ஏற்படலாம். இதற்கு பிரத்தியேகமான மருந்தளிப்பு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிரோசிஸ் பிரச்சனைக்கு மருந்து மட்டுமின்றி அறுவை சிகிச்சையோ மருத்துவமனையில் தங்கி சில காலங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.

வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் ஹெபடைடிஸ் போன்ற நோயைப் பற்றி சொல்லுங்களேன்?

ஹெபடைடிஸ் அதாவது கல்லீரல் அழற்சி என்பது வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடியது. ஹெபடைடிஸ் ஏ, பி, சி மற்றும் இ என்று நான்கு வகையான வைரஸ்களினால் கல்லீரலில் தொற்று ஏற்படலாம். இந்த தொற்றுகளுக்கு பொதுவாக ஆரம்பக்கட்டத்தில் அறிகுறிகள் இருப்பதில்லை. எனவே பரிசோதனைகள் மூலம் மட்டுமே அல்லது மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யும் பொழுது மட்டுமே இது பெரும்பாலும் தெரிய வருகிறது. இதில் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி மட்டுமே நம்மிடம் உள்ளது. இந்த தடுப்பூசி எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த பாதுகாப்பை நமக்கு சுலபமாக அளிக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். இன்று குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கட்டாயமானதாக உள்ளது. ஆனால் பெரியவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில்லை ஆனால் தடுப்பூசி நமக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க பெரிதும் உதவுகிறது.

வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் ஹெபடைடிஸ் சி என்பது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை கொண்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்…

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது, கல்லீரலின் பெரும்பகுதி செயலிழந்து விடும்பொழுது செய்யப்படுகிறது. இதில் எந்த விதமான ஆபத்தும் இல்லை என்று கூற முடியாவிட்டாலும் 90% இந்த அறுவை சிகிச்சை வெற்றியை அளிக்கிறது. கல்லீரல் பற்றிய ஒரு அதிசயம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. நம் உடலின் எந்த ஒரு உறுப்பையும் வெட்டி எடுக்கும் பொழுது அது வளர்வதில்லை கல்லீரல் தவிர. கல்லீரலின் ஒரு பகுதியை நாம் வெட்டி எடுத்து விட்டால் ஒரு மாதத்திற்குள் அது முழுமையாக வளர்ந்து விடும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தானம் அளிப்பவரின் கல்லீரலும், தானம் பெற்றவரின் கல்லீரலும் ஒரே மாதிரியாக ஒரு மாதத்திற்குள் முழுமையாக வளர்ந்து விடும். தன்னுடைய செயல்பாடுகளை மீண்டும் துவக்கிவிடும் என்பது மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு உயிரை காப்பாற்றக் கூடியது மற்றும் ஆபத்து பெரிதாக இல்லாத 90 சதவிகிதத்திற்கு மேல் வெற்றி அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறை என்பதை மக்கள் உணர வேண்டும். மேலும் கல்லீரலுக்கான பிரத்தியேக உணவு என்று குறிப்பாக சொல்ல முடியவில்லை என்றாலும் பால் சக்கரை சிக்கிரி சேர்க்காத காப்பி ஓரளவுக்கு நல்லது என கூறி முடித்தார் கல்லீரல் சிறப்பு மருத்துவர் சுவாதி ராஜு அவர்கள்.

Dr Swati Raju,

Medical Gastroenterology, Hepatology & Liver Transplant Physician,

Kauvery Hospital,

Chennai.

Full View
Tags:    

மேலும் செய்திகள்