நவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்

வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.;

Update:2024-03-22 16:17 IST

திருவாரூரில் பிறக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடல் முக்தி என்பது பழமொழி.

வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. சப்தவிடங்க தலங்களில் புவனி விடங்க தலமாகும். தேவார பாடல் ஆசிரியர்களால் பாடப்பெற்றது. சோழநாட்டு காவிரி தென்கரை தலங்களில் 125-வது தலம்.

நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வழியாக 50 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டியில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களாலும் பூஜிக்கப்பட்ட தலம். வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்ட தலமானதால் வேதாரண்யம் என்னும் பெயர் பெற்றது. 64 சக்தி பீடங்களில் இது சுந்தரி பீடமாகும். இங்குள்ள சுவாமி பெயர் வேதாரண்யேஸ்வரர். அம்பாள் பெயர் வேதநாயகி.

சிவபெருமானின் திருமணம் கைலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். அவர் அகத்திய முனிவரை அழைத்து நீ தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்து என்று கேட்டுக் கொண்டார். உடனே அகத்தியர் பணிந்து வணங்கி 'ஈஸ்வரா, தங்கள் திருமணக் கோலத்தை தரிசிக்க இவ்விடம் முனிவர்களும் ரிஷிகளும் கூடி நிற்க, நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு இந்த பாக்கியம் கிடையாதா?' என்று மன வேதனையுடன் கேட்டார்.

அதற்கு சிவபெருமான், 'தென்திசையில் நீ எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறாயோ அங்கு நான் உனக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருவேன்' என்று சொல்லி அனுப்பினார். இதனை ஏற்றுக்கொண்ட அகத்திய முனிவர் தென்திசை நோக்கி வந்தபோது வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் வன்னிமரத்தடியில் தவம் மேற்கொண்டார். அப்போது உலகம் சமநிலை அடைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அகத்தியர், இறைவனின் திருமண தரிசனம் கிடைத்திட இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள அகஸ்தியன் பள்ளியில் தங்கி, வேதாரண்யத்தில் இறைவன் தரிசனம் வேண்டி தியானித்து வணங்கி வந்தார்.

 

பக்தர்களின் மனக்குறையை தாயினும் மேலாய் பரிந்து வந்து நிறைவேற்றும் தென்னாடுடைய சிவன், அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன், திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார்.

பின்னர் அகத்தியருக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து இனி நீ அகத்தீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என அருள்புரிந்தார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கு சிவபெருமான் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிலையாக தம்பதியராய் அமர்ந்து காட்சி கொடுப்பது சிறப்புடையது. இங்கு சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.

திருக்கதவு திறந்தது

தேவாரபாடல் ஆசிரியர்களான திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், வேதாரண்யத்திற்கு வந்தனர். திருக்கோவிலை வலம் வந்தபோது அங்கு வேதங்கள் வழிபட்டு அடைத்து சென்ற கோவில் கதவை பார்த்தனர். அந்த கதவை திறக்க முடியாததால் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் 'திட்டி வாயில்' என்றும் பக்கவாயில் அமைத்து கொண்டு ஆலயத்திற்கு சென்று வந்தனர். இதனை அறிந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் நேர் வழியாக இறைவனை வணங்க வேண்டி விரும்பினர். உடனே திருநாவுக்கரசர்

'பண்ணின் நேர்மொழியாளுமை பங்கரோ

மண்ணினார் வலஞ்செய் மறைக்காடரோ

கண்ணினாலுமைக் காண கதவினைக்

திண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...'

என தொடங்கும் பாடலை பாடினார்.

பதினோரு பாடல்கள் முடிவில் அங்கு அற்புதம் நிகழ்ந்து, திருக்கதவு திறந்தது. இருவரும் இறைவனை தரிசித்து பின் திருக்கதவை அடைக்கவும், திறக்கவும் செய்திடும் நிலையில் கதவினை அடைக்கும்படி திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தரை வேண்டினார். அதன்படி திருஞானசம்பந்தரும்...

'சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்

மதுரம் பொழில் சூழ்மறைக்காட்டுறை மைந்தா

இதுநன்கிறை வைத்தருள் செய்க வெணக்குன்

கதவுந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே'

என்ற பாடலை பாடுகிறார்.

திருக்கதவும் மூடப்பெற்றது.

மாசிமகப் பெருவிழாவில் இந்த ஐதீக விழா நடைபெறுகிறது.

நவக்கிரகங்கள்

வேதாரண்யம் கோவிலில் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசிப்பதற்காக மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல் தங்கள் வக்ர அமைப்பை விட்டு, இங்கு அனைத்து கோள்களும் நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் காட்சி தரும் வகையில் அமைந்துள்ளன. அதனால் இங்கு வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

கோளறு பதிகம்

வேதாரண்யத்தில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரைக்கு செல்ல விரும்பினார். அப்போது அருகில் இருந்த திருநாவுக்கரசர் இப்போது நாளும், கோளும் சரியில்லை. மிக்க துன்பம் உண்டாகும். இப்போது போக வேண்டாம் எனக்கூறி தடுத்தார். அதற்கு சம்பந்தர் நாம் போற்றுவது சிவபெருமானின் பாதத்தை நாளும், கோளும் என்ன செய்யும் என்று சொல்லி

'வேயுறு தோளி பங்கன் விட முன்டகண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி

சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல, நல்ல அவை நல்ல, நல்ல

அடியாரவர்க்கு மிகவே'

என்ற கோளறு பதிகத்தை பாடினார்.

இந்த பாடலை பாடி வணங்கினால் நவக்கிரகங்களும் நலம் தரும். பின்னர் அப்பர் பெருமானும், சம்பந்தரை ஆசி வழங்கி அனுப்பி வைத்தார்.

அனைத்து கோவில்களிலும் துர்கை அம்மன் வடக்கு பக்கத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு தெற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது. மேலும் 96 தீர்த்தங்களை கொண்டு விளங்கும் தலம். ஸ்ரீகங்கா தேவி (நதி) இங்கு மணிக்கர்ணிகை தீர்த்தத்தில் நீராடி புனிதம் பெற்ற தலம். வங்ககடல், சன்னிதிகடல், வேதநதியாக அழைக்கப்படும் தீர்த்ததலம்.

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, அர்த்தோ தயம், மகோதய புண்ணியக்காலம், சந்திர கிரகணத்தில் கல்யாண சுந்தரர் எழுந்தருளி வேதநதி என்னும் கடலில் தீர்த்தம் கொடுப்பது சிறப்பு ஆகும்.

இந்த புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆதிசேது என்னும் கோடியக் கரையில் உள்ள சித்தர் கட்டத்தில் நீராடி, பின்பு வேதாரண்யம் சன்னிதி கடல் என்னும் வேதநதியில் நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் இங்கு விழா நடைபெறும். ஆடிபூரமும், மாசிமக விழாவும் பெருவிழாவாக கொண்டாடப்படும்.

மார்கழி மாதம் வேதங்களுக்கு காட்சி கொடுப்பதற்காக ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரர் எழுந்தருளி வேதாமிர்த ஏரியில் தீர்த்தம் கொடுத்து விதயபாத நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

எலிக்கு அரசபதவி கொடுத்த சிவபெருமான்

வேதாரண்யம் விளக்கழகு என்ற பெயர் பெற்றது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்த்தசாமபூஜை முடிந்து திருக்கதவு தாழிட்டபிறகு கருவறை விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. அப்போது எலி ஒன்று நெய்யை குடிப்பதற்காக சென்றபோது அதன் மூக்கு பட்டு தீபம் தூண்டப்பட்டு, பிரகாசமாக எரிந்தது. அணைய இருந்த விளக்கை, தூண்டிவிட்டதற்காக எலிக்கு, சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக்கி அருள் புரிந்தார்.

ஸ்ரீராமரின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய விநாயகர்

ஸ்ரீராமபிரான் இலங்கையில் ராவணனை வதம் செய்தபிறகு அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது அவரை துரத்தி வந்தது. ராமர் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது மேற்கு முகமாக அமைந்துள்ள விநாயகரை வணங்கினார். அப்போது விநாயகர் தனது வலது காலை தூக்கி ராமருக்கு பிடித்திருந்த பிரம்மஹஸ்தி தோஷத்தை உதைத்து நீக்கியதாக தலபுராணம் கூறுகிறது. அதனால் இந்த விநாயகருக்கு ராமவீரஹத்தி விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. வலது காலை தூக்கியபடி நர்த்தன விநாயகர் போல் இந்த விநாயகர் காட்சி அளிப்பது சிறப்புடையது.

விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற தலம்

வசிஷ்ட முனிவருக்கும், விசுவாமித்திரர் முனிவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால் விசுவாமித்திரர் கடும் தவம் செய்து பல சித்திகளை பெற்றார். ஆனால் அவருக்கு பிரம்ம ரிஷியாகும் பேறு கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்திய விசுவாமித்திரர் வேதாரண்யத்திற்கு வந்து தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார்.

அவரது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மதேவன், விசுவாமித்திரர் முன் தோன்றி வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தை விசுவாமித்திரருக்கு அளித்தார்.

ஆதிசேது

ராமபிரான் சீதையை தேடி இங்கு வந்த போது கோடியக்கரையில் இருந்து இலங்கையை பார்த்தார். அப்போது ராவணனின் அரண்மனையின் பின்புறம் தெரிந்தது. ஒரு வீரன் கொல்லைப்புறமாக போருக்கு செல்லக் கூடாது என்று நினைத்த அவர் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து இலங்கைக்கு சென்றதாக வரலாறு. அதனால் ராமர் இங்கு முதன் முதலில் வந்ததால் 'ஆதி சேது' என இப்பகுதி அழைக்கப்படுகிறது.

வீணை இல்லாத சரஸ்வதி

பல்வேறு சிறப்புகளை பெற்ற இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள். இந்த கோவிலில் உள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதில் அம்மனின் குரல் இனிமையானதா, சரஸ்வதி வீணையின் நாதம் இனிமையானதா என்ற போட்டி நிலவியது. இதில் வீணையின் நாதத்தை விட அம்மனின் குரல் இனிமையாக இருந்தது. இதனால் சரஸ்வதி தவக்கோலத்தில் வீணை இல்லாமல் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.

Tags:    

மேலும் செய்திகள்