குழந்தை வரம் தரும் உக்கிர மாகாளியம்மன்

தென்னுரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் கோவிலுக்கு செல்ல, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.

Update: 2024-05-17 11:59 GMT

திருச்சி தென்னூரில் உள்ளது ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் ஆலயம். ஆலயம் வட திசை நோக்கி அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்னூர் அண்ணாநகரில் உள்ளது இந்த ஆலயம்.

முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் நீண்ட பிரகாரம். இடது புறம் சாம்புகாமூர்த்தியின் தனி சன்னிதி உள்ளது. வலதுபுறம் மகாவில்வ மரம் பல நூறு தொட்டில்களை சுமந்த வண்ணம் காட்சி தருகிறது.

அடுத்து மகாமண்டபம் பளிங்கு கற்களால் தளம் அமைக்கப்பட்டு பளபளவென காட்சி தருகிறது. மண்டபத்தின் நடுவே சூலம், பீடம், சிம்மம் ஆகியவை மூலவரின் எதிரே அமைந்துள்ளன.

மகாமண்டபத்தை அடுத்து உள்ள கருவறை நுழைவாசலை நெடிந்துயர்ந்த துவாரபாலகிகளின் சுதை வடிவத் திருமேனிகள் இருபுறமும் அலங்கரிக்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அரக்கன் மகிஷனை வதம் செய்யும் திருக்கோலத்தில் அன்னை அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள்.

இங்கு அன்னை உக்கிரமாகாளியம்மனுக்கு எட்டு கரங்கள். வலது கரங்களில் சூலம், அம்பு, வஜ்ரம், சக்கரம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய அன்னை தன் இடது கரங்களில் வில், கட்சம், சங்கு, கபாலம் ஆகியவைகளை ஏந்தி காட்சி தருகிறாள்.

அன்னையின் இடது புறம் சந்தன கருப்பு சாமியும், வலதுபுறம் உற்சவ அம்மனும், தனி சன்னிதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

திருச்சுற்றின் மேற்கில் சப்த கன்னிமார், மதுரைவீரன், சங்கடவிமோசன ஆஞ்சநேயர், பரிபூரண விநாயகர், விஷ்ணு துர்க்கை ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு திருச்சுற்றில் தலவிருட்சமான வன்னி மரம் நெடிந்துயர்ந்து வளர்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள கீழ்வாசலில் இருக்கும் ஸ்ரீ உக்கிர காளியம்மனும், இங்குள்ள ஸ்ரீ உக்கிர மாகாளியம்மனும் கர்ப்பக்கிரகத்தில் ஒரே உருவத்தில் தோற்றம் அளிப்பது வியப்பிற்குரிய தகவலாகும்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முற்கால சோழ வம்சத்தினரால் வழிபட்டு வரப்பட்ட தலமாகும். காலப்போக்கில் ஏற்பட்ட வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றத்தால் இக்கோவில் சிதைந்து போனதாகவும், பின்னர் ஊர் மக்கள் முயற்சியால் புனரமைப்பு செய்யப்பட்டு, நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி போன்ற ஆற்றின் கரைகளில் திருச்சியில் உள்ள செல்லாண்டியம்மன், குழுமாயி, குழந்தலாயி, அடைக்காயி அம்மன் மற்றும் உக்கிர மாகாளியம்மன் ஆலயங்கள் அமைந்திருப்பது இந்த ஊரின் சிறப்பு அம்சம்.

திருவிழா-வழிபாடு

பங்குனி மாதம் இங்கு 15 நாட்கள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்னை வீதியுலா வருதல், தேரோட்டம், குட்டி குடித்தல், அருள்வாக்கு கூறுதல், மஞ்சள் நீராட்டு, விடையாற்றி போன்ற திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக தினசரி இங்கு வந்து திருவிழாவில் பங்கு பெறுவார்கள். அப்போது அன்னைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பான வழிபாடு செய்வார்கள்.

சித்திரை மாத பவுர்ணமி அன்று அன்னைக்கு ராஜ மகா அபிஷேகம் நடைபெறும். சுமார் ஆயிரம் லிட்டர் பாலுடன் மஞ்சள் பொடி, திரவிய பொடி, சந்தனம், பன்னீர், இளநீர் போன்றவைகளுடன் பிரமாண்டமாக அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகத்தை காண பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். அன்னாபிஷேகமும் நடைபெறும்.

ஆடிமாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

ஆடி மூன்றாவது வெள்ளியன்று 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் பெண்கள் விளக்குடன் மட்டுமே ஆலயத்திற்கு வருவார்கள். அவர்களது பூஜைக்கு தேவையான அனைத்தையும் ஆலய நிர்வாகமே தரும். 1008 பெண்கள் வண்ண வண்ண உடை உடுத்தி, திருவிளக்கு ஏற்றி வழிபடும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் அன்னைக்கு வெள்ளிக் கவசம் சாத்துவதுடன், ஆடி மாத பிற வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் அம்மன் அற்புத அழகுடன் காட்சி தருவாள்.

புரட்டாசி மாத நவராத்திரி பத்து நாட்களும் அன்னை விதம் விதமான அலங்காரத்துடன் திருச்சுற்றில் பவனி வரும் காட்சியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கார்த்திகை மாதம் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி 30 நாட்களும் திருப்பள்ளி எழுச்சி பாடப்படும்.

தை அமாவாசை அன்று அன்னைக்கு ஏக தின லட்சார்ச்சனை நடைபெறுவது உண்டு.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கிரக பெயர்ச்சி நாட்களில் அம்மன் சன்னிதியின் முன் நடைபெறும் ஹோமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கு பெற்று பயன் பெறுவார்கள்.

அன்னைக்கு மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதால் கண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து பூரண நலம் பெறலாம் என கூறுகின்றனர் பக்தர்கள்.

பேருந்து வசதி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்னூர் வரை நகர பேருந்து வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.

மனத்துயரையும் உடல் துன்பங்களையும் அறவே அகற்றி அருள் புரிவதில் அன்னை உக்கிரமாகாளியம்மனுக்கு நிகரில்லை என்பது நிஜமே!

நேர்த்திக்கடன்

குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கும் தம்பதியர் அன்னையிடம் வந்து தங்களது குறைகளை முறையிடுகின்றனர். கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கின்றனர். பின் தன்னுடன் கொண்டு வந்திருக்கும் சிறிய மரத்தொட்டிலை அன்னையின் எதிரே வடக்குப் பிரகாரத்தில் இருக்கும் மகா வில்வ மரத்தில் கட்டுகின்றனர். சுமையை அன்னையிடம் இறக்கி வைத்த மன நிறைவுடன் இல்லம் திரும்புகின்றனர். விரைவில் அவர்களது பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டுகிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், தங்களது குழந்தையை ஆலயத்திற்கு எடுத்து வந்து கண்ணீர்மல்க அன்னைக்கு நன்றி கூறுகின்றனர். பட்டுப் புடவை வாங்கி அன்னைக்கு சாத்தி அன்னையின் மனம் குளிர அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். அவர்களது நன்றியை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாள் அன்னை.

Tags:    

மேலும் செய்திகள்