தூத்துக்குடி கடலில் காற்றாலைகள்

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் காற்று சீசன் இருப்பதால் இந்த காலகட்டங்களில் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது.

Update: 2024-02-26 00:05 GMT

உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அனல் மின்சார நிலையம் சுற்றுச்சூழலுக்கு அதிகப்பாதிப்பு ஏற்படுத்துவதாலும், காற்றுமாசு அதிகம் உண்டாவதாலும் இதற்கு மாற்றாக சூரிய வெப்பம் மூலமும், காற்றாலைகள் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் திட்டங்களே இப்போது அதிகம் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு அதிக வாய்ப்பு, சாத்தியக்கூறுகள் இருப்பதால் இங்கு இத்தகைய திட்டங்களுக்கு அதிக முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இங்கு ஆண்டுக்கு 300 நாட்கள் நல்ல வெயில் அடிப்பதால் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிகளவில் தொடங்க மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்சார வாரிய தலைவரான கூடுதல் தலைமை செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கூரைகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் என்று அழைக்கப்படும் சூரியசக்தி தகடுகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது இத்தகைய சூரியசக்தி வாயிலாக உற்பத்தி செய்யும் நிலையங்கள் மூலமும், கட்டிடங்களின் மேற்கூரைகளில் அமைக்கப்பட்டுள்ள பேனல்கள் மூலமும் 7,134.12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசாங்கமும் இந்த திட்டத்தில் இப்போது அதிக முனைப்பு காட்டி வருகிறது. பட்ஜெட்டில் கூட இதற்கான இரு அறிவிப்பை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஒரு கோடி வீடுகளில் இத்தகைய பேனல்கள் அமைத்து கொடுத்து மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்க வகைசெய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபோல காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் ஏற்றவகையில் தமிழ்நாட்டில் 8,894.815 மெகாவாட்டுக்கு உற்பத்தி திறன் இருக்கிறது. அதிக காற்றுவீசும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட காற்றாலைகள் இருக்கின்றன.

மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் காற்று சீசன் இருப்பதால் இந்த காலகட்டங்களில் அதிகளவு மின்சாரம் கிடைக்கிறது. இப்போது தமிழக கடற்கரை பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடியில் கடலுக்குள் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலைகளை அமைக்க மத்திய அரசாங்கம் டெண்டர் கோரியுள்ளது. ஒவ்வொரு பிளாக்கிலும் ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி என்ற கணக்கில் 4 பிளாக்குகளில் இந்த காற்றாலைகளை கடலுக்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பிளாக் என்பது 10 சதுர கி.மீ. இடத்தைக்கொண்டதாகும். இதை நிறுவுவதற்கு ஆகும் செலவு கிடைக்கும் வருவாயைவிட அதிகமாக இருக்கும் என்பதால் இந்த வித்தியாச தொகையை நிதி உதவியாக வழங்கும் பற்றாக்குறை தொகையை ஈடுசெய்யும் தொகையான ''வையபிலிட்டி கேப் பண்டு'' என்று அழைக்கப்படும் நிதி உதவியை மத்திய அரசாங்கம் வழங்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் அதிக பங்கை தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும். தமிழ்நாட்டில் 1,746 கிலோ மீட்டர் கடற்கரை இருப்பதால் மேற்கொண்டு எங்கெல்லாம் இத்தகைய காற்றாலைகளை அமைக்க முடியும் என்பதையும் மத்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்