இனியும் இந்த தவறுகள் நடக்கக் கூடாது

முதுநிலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வை தேசிய மருத்துவத்தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வை எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர்களாக இருப்பவர்கள் எழுதுவார்கள்.

Update: 2024-08-29 01:32 GMT

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ்-2 படித்து முடித்தவுடன் அந்த பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களைக்கொண்டு எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இதில் எந்த குழப்பமும் இல்லாமல் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அந்தவரிசையில் இடம் கிடைத்து வந்தது. ஆனால், பொதுத்தேர்வை எழுதி மதிப்பெண் பெற்றவர்களுக்கு, மேலும் ஒரு சுமையாக 'நீட்' தேர்வை கொண்டுவந்து, இப்போது குழப்பத்துக்கு மேல் குழப்பமான நிலை உருவாகிவிட்டது.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வு 2017-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஆனால், 2013-ம் ஆண்டில் இருந்தே எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கும் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை படிப்புகளுக்கான 'நீட்' தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. முதுநிலை படிப்புக்கான 'நீட்' தேர்வை தேசிய மருத்துவத்தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வை எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர்களாக இருப்பவர்கள் எழுதுவார்கள்.

இந்த ஆண்டு இளநிலை மருத்துவப்படிப்புக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் பல்வேறு காரணங்களால் 3 முறை வெளியிடப்பட்டு, அந்த தேர்வு மீதான நம்பகத்தன்மை மாணவர்களிடையே போய்விட்டது. அதுபோல முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்கான 'நீட்' தேர்வும் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடப்பதாக இருந்தது. இதில் கலந்துகொள்ள ஏராளமான டாக்டர்கள் தேர்வுமையம் உள்ள ஊர்களுக்கு முந்தினநாளே சென்று தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அன்றையதினம் நள்ளிரவில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அத்தகைய சூழ்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை 'நீட்' தேர்வு கடந்த 11-ந்தேதி காலையும், மாலையும் என இரு வேளைகளாக நடந்தது. நாடு முழுவதும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் மிக அதிகமாக 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட டாக்டர்களும் எழுதினார்கள். முன்னதாக, தேர்வு மையங்களை குறைத்ததன் காரணமாக தேர்வு எழுதுவதற்கான மையங்கள், தமிழ்நாட்டுக்குள்ளேயே கொடுக்கப்படாமல் 500 முதல் ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்தன.

பிற மாநில தேர்வர்களுக்கும் இந்த நிலைதான். இப்படி தேவையில்லாமல், தேர்வு மையத்தை கடைசிநேரத்தில் வெகுதூரத்துக்கு ஒதுக்கியிருந்ததால் ரெயில், விமானங்களில் டிக்கெட் எடுக்கக்கூட முடியாத சிரமம் ஏற்பட்டது. தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போதே 4 மையங்களை விருப்ப மையங்களாக தெரிவிக்க கேட்கிறார்கள். அதில் ஒன்றில் எழுதுவதற்கு 'ஹால்டிக்கெட்' கொடுக்காமல் இப்படி தொலைதூரத்தில் உள்ள மையங்களை ஒதுக்கியிருந்தது சரியல்ல என்று தேர்வை எழுதிய டாக்டர்கள் தங்களின் ஆதங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.

தேர்வர்களின் இந்த எதிர்ப்பை தொடர்ந்தும், இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து வலியுறுத்தியதையடுத்தும் தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் மாற்றப்பட்டன. ஆனால் இது எல்லோருக்கும் மாற்றப்படவில்லை. சிலருக்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுத பணிக்கப்பட்டனர். உதாரணமாக, தர்மபுரியை சேர்ந்த பெண் டாக்டருக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. அவரும் விமானம் மூலம் சென்று தேர்வை எழுதிவிட்டு திரும்பினார். இப்படி கடைசிநேரத்தில் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்குள்ளாக்காமல், வரும் காலங்களில் இந்த தவறுகள் நடக்காதவாறு அவரவர் ஊர்களுக்கு அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது தேர்வர்களின் கருத்து.

Tags:    

மேலும் செய்திகள்