தங்கத்தின் விலையை உடனடியாக குறைத்த பட்ஜெட்!

வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.17,500 மிச்சமாகும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

Update: 2024-07-24 07:15 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது பிரதமரின் மூன்றாவது அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் என்ற வகையில், நாடு முழுவதும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்ட பல அம்சங்கள், குறிப்பாக 2030 வரை ஆண்டுதோறும் 78½ லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்ற மதிப்பீடு அறிவிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கெல்லாம் ஏற்ற வகையில், தொடர்ந்து, 7-வது முறையாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கை அளிக்கும் பட்ஜெட்டாக இருந்தது. தொடக்கத்திலேயே இந்த பட்ஜெட் பிரதமரின் 9 முன்னுரிமைகளை, அதாவது விவசாயத்தில் உற்பத்தி திறன், வேலை வாய்ப்பு, சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகள், நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி, அடுத்த தலைமுறைக்கு தேவையான சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு கோடி இளைஞர்களுக்கு வரும் 5 ஆண்டுகளில் 500 முதன்மை நிறுவனங்களில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவர்கள் வாழ்க்கைக்கு ஒளிகாட்டுவதாக அமையும். நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொழிற்பூங்காவை தமிழ்நாட்டில் தொடங்கவேண்டும் என்று தமிழக அரசும் எம் பிக்களும் வலியுறுத்தவேண்டும். பீகாருக்கும் ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்றாலும், அந்த மாநிலங்களுக்கு தேவையான பல அறிவிப்புகள், சிறப்பு நிதி உதவிகள் வெளியிடப்பட்டன.

இதுபோல, பீகார், அசாம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என்று தாராளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கும், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படாதது தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. தமிழகத்துக்காக என எந்த அறிவிப்பும் இல்லை. சிறு தொழில்களுக்கு வழங்கும் முத்ரா கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ,20 லட்சமாக உயர்த்தியிருப்பது சிறு தொழில்களை வளர்க்க பெரிதும் உதவும். இதுபோல உயர்கல்விக்கான கடன் ரூ,10 லட்சமாக உயர்த்தப்பட்டது கல்வி வளர்ச்சிக்கு கை கொடுக்கும். முதலீட்டு செலவீனங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பல முதலீடுகளுக்கு அரணாக இருக்கும். தங்கம், வெள்ளிக்கான சுங்கக்கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்த ஓரிரு மணி நேரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ,2,200 விலை குறைந்து, பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக மாநிலங்களுக்கு ரூ.1½ லட்சம் கோடி வட்டியில்லா கடன் அளிக்கப்படும் என்பது வரவேற்கத்தகுந்தது என்றாலும் இந்த தொகையை இன்னும் சற்று உயர்த்தியிருக்கலாம் என்ற கோரிக்கையும் எழுகிறது. எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய எந்தவித அறிவிப்பும் இல்லாதது பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. தாமதமாக வரி தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்பது பாராட்டுக்குரிய முடிவாகும். தனி நபர் வருமான வரி விகிதத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மகிழ்ச்சியைக்கொடுக்கும். வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.17,500 மிச்சமாகும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் பட்ஜெட் இது.

Tags:    

மேலும் செய்திகள்