தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் இன்னும் வேண்டும்
கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் நிறைய தொழிற்சாலைகளை தொடங்க முன்வருவார்கள். அப்போது நிறைய வேலைவாய்ப்புகள் பெருகும்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 7, 8-ந்தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இது 3-வது மாநாடாகும். இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 3-வது மாநாட்டில் இதுவரை நடந்த மாநாடுகளைவிட அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இது பெரிய சாதனை என்றாலும் மற்ற மாநிலங்களை குறிப்பாக உத்தரபிரதேசம், குஜராத் மாநிலங்களை ஒப்பிடும்போது ஆங்கில கவிஞன் ராபர்ட் பிராஸ்ட் தன் கவிதையில் 'மைல்ஸ் டு கோ பிபோர் ஐ ஸ்லீப்' அதாவது நான் தூங்கும் முன்பு இன்னும் பல மைல்கள் செல்லவேண்டும் என்று கூறியதற்கு ஏற்றவகையில் இருக்கிறது.
உத்தரபிரதேசத்துக்கு ரூ.33 லட்சம் கோடியும், குஜராத்துக்கு ரூ.26 லட்சம் கோடியும் தொழில் முதலீடுகளுக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதுபோல கொண்டுவர தமிழ்நாடு தன் வளர்ச்சிக்கு இன்னும் நீண்டதூரம் போகவேண்டியதிருக்கிறது. அதற்காக மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகள்தான் மிகமிக இன்றியமையாததாகும். கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் நிறைய தொழிற்சாலைகளை தொடங்க முன்வருவார்கள். அப்போது நிறைய வேலைவாய்ப்புகள் பெருகும்.
அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மக்களின் வாழ்வாதாரமும் பெருகும். அந்த நிலைக்கு நிறைய வசதிகள் வேண்டும். உத்தரபிரதேசத்தில் 24 விமான நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களும், மதுரை, தூத்துக்குடி, சேலம், வேலூர் விமான நிலையங்களும் மட்டுமே இருக்கின்றன. இதிலும் தூத்துக்குடியில் இரவில் விமானங்கள் வரும் வசதி இல்லை.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்காக பயன்படுத்தப்பட்ட விமான நிலையங்கள் கயத்தாறு போன்ற இடங்களில் இருந்தும் இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஓசூர் 'எலெக்ட்ரானிக் சிட்டி'. அங்கு விமான நிலையம் அமைக்க வாய்ப்புகள் இருந்தும் பெங்களூருவில்தான் இருக்கிறதே என்று கர்நாடக அரசால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருகருகே இருந்தும் மும்பை-நவி மும்பை, டெல்லி-நொய்டா ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன.
துறைமுகத்தை பொறுத்தமட்டில் நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 பெரிய துறைமுகங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. ஆனால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆழம் அதிகம் இல்லை என்பதால் சிறிய கப்பல்கள் மட்டுமே வந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு சென்று பெரிய கப்பல்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்ற இன்னும் ஒரு துறைமுகம் அதாவது தூத்துக்குடியில் வெளி துறைமுகம் அமைக்கவேண்டும் என்ற மந்திரிசபை முடிவெடுத்த திட்டமும் கிடப்பில் இருக்கிறது. ரெயில்வேயை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் சரக்கு ரெயில் போக்குவரத்துக்கு என்று பிரத்யேக ரெயில் பாதை இல்லை. நெடுஞ்சாலைகளை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் 8 வழிப்பாதை ஒன்றும் இல்லை. இப்படிப்பட்ட வசதிகள் உத்தரபிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருப்பதால்தான் அங்கு வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்த வசதிகள் அனைத்தையும் செய்ய மத்திய அரசாங்கம் தனி கவனம் செலுத்தவேண்டும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி இன்னும் அபரிமிதமாக இருக்கும்.