மின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு!

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84 சதவீதத்தை அடைந்துள்ளது.

Update: 2024-05-06 23:57 GMT

சென்னை,

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, அதற்கேற்ற வகையில் காய்களை மிக லாவகமாக நகர்த்தி வருகிறார். புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் ஏற்கனவே செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கவும், விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றிவருகிறது. அரசு அளிக்கும் பல சலுகைகள், ஊக்கங்கள் காரணமாக அனைத்து தொழிலிலும் ஒரு உத்வேகம் காணப்படுகிறது. உற்பத்தி பெருகி ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறையில் ஒரு 'டேஷ் போர்டு' வைத்திருக்கிறார். அதில் அனைத்து தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அன்றாட தகவல்கள் இடம் பெற்றுக்கொண்டே இருக்கிறது. அதைப்பார்த்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, இன்னும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். எல்லா தொழிலிலும் முன்னேற்றம் காணப்பட்டாலும் மின்னணு தொழிலில் வியத்தகு ஏற்றம் எட்டுக்கால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் 'எலக்ட்ரானிக் சிட்டி', அதாவது 'மின்னணு நகரம்' என்றால் பெங்களூரு என்று பெயர் இருந்தது. அதுபோல, கர்நாடகமும் உத்தரபிரதேசமும்தான் மின்னணு ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களாக கருதப்பட்டது. தமிழ்நாடு இப்போது அந்த இரு மாநிலங்களையும் தாண்டி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ், சால்காம்ப், பெகட்ரான் போன்ற 15 முன்னணி மின்னணு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இப்போது டாடா நிறுவனம் சென்னையில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் தைவான் நாட்டு செல்போன் நிறுவனமான பெகட்ரான் நிறுவனத்தை வாங்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், அங்கேயே மேலும் ஆப்பிள் ஐ போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையையும் டாடா நிறுவனம் தொடங்கப்போகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சிறந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, இப்போது தனது முந்தைய சாதனைகளை முறியடித்து ஏற்றுமதியில் ஒரு பெரிய வளர்ச்சியைக்காட்டியுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84 சதவீதத்தை அடைந்துள்ளது. அடுத்த இடத்தில் இருக்கும் கர்நாடகம் 15.78 சதவீதம் என்ற அளவிலும், 3-வது இடத்தில் இருக்கும் உத்தரபிரதேசம் 15.32 சதவீதத்திலும் இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 9 பில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்போது 9.56 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்து தமிழ்நாட்டை யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் தயாராகும் மின்னணு பொருட்களில் முக்கியமாக ஆப்பிள் ஐ போன்கள் தான் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் மிக அதிகளவில் மின்னணு பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றன.

இப்போது தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐ போன்கள் உள்பட அனைத்து மின்னணு பொருட்களையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேகம், உற்பத்தி பெருகும் வேகம் ஆகியவற்றைப்பார்த்தால் அடுத்த சில ஆண்டுகளில் உலகில் முன்னணி நாடுகளில் வாழும் மக்கள் கையில் இருக்கும் மின்னணு பொருட்களில் எல்லாம் 'மேட் இன் தமிழ்நாடு' அதாவது, 'தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது' என்ற பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும், அது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்நாட்டின் புகழ் கொடி ஓங்கி உயர பறக்கும் என்றால் மிகையல்ல.

Tags:    

மேலும் செய்திகள்